Sunday, January 22, 2012

இதுவும் அபிவிருத்தி தான்


தென் இலங்கையில் அபிவிருத் திப் பணிகள் இப்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளின் அபிவிருத்திக்கு அரசி யல்வாதிகள் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றனர்.
இந்த அபிவிருத்தி ஆர்வம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் போரின் பின்னரான மீள்கட்டுமான முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இந்த இரண்டு மாகாணங்களும் போரினால் மிகவும் @மாச மாகப் பாதிக்கப்பட்டவை. பெரும்பாலான பகுதிகள் அன்றும் சரி இன்றும் சரி மிகவும் வறிய பிரதேசங்களாகவே, அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதிகளாகவே காணப்படுகின்றன.
அரசியல் நோக்கங்களுக்காக வெளித்தெரியும் வகையிலான அபிவிருத்திப் பணிகள் வடக்கில் அதிகம் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அபிவிருத்திப் பணிகள் உதவுவதாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் பருவமழைக்குப் பின்னர் பெரும்பலான வீதிகள் குன்றும் குழியுமாக மாறிவிட்டன. பராமரிப்பின்மையால் அவை நாளாந்தம் மேலும் சேதமடைந்தே வருகின்றன. பழைய வீதிகள் புனரமைக்கப்படா மலும் மணற்பாதைகள் தார் இடப் படாமலும் காணப்படுகின்றன. அதிகளவான மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கேஇவ்வாறான நிலை தோன்றியுள்ளது.
இதுபோலவே வன்னியிலும் நீண்ட காலமாக வீதிகள் புனரமைக் கப்படாமல் காணப்படுகின்றன. யுத்தம் காரணமாக அந்தப் பகுதியில் அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயிருந்தாலும் இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. ஆனாலும் அபி விருத்திக்கான சாத்தியங்களும், நிதி ஒதுக்கங்களும், முன்னுரிமைப்படுத்த லும் இந்தப் பகுதிக்கு குறைந் தளவே வழங்கப்படுகின்றன. இதனால் மக்கள் தமது அடிப்படைத் தேவைகள் முதல் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நாளுக்கு நாள் வெவ்வேறு வகையாக நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இடங்களுக்கிடையேயான தூரம் அதிகமாகவும் சேவை மையங்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகியிருப்பதாலும் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்யுள்ளது.
ஆனாலும் அதற்கான வீதி அபிவிருத்தி, போக்குவரத்து வசதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை. மழைக்காலங்களில் வெள்ளக் காடாக மாறும் வீதிகள் வெயில் காலங்களில் புழுதி பாதைகளாக மாறி வருகின்றன.
இதனால் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போவதுடன் உடல் உபாதையைத் தினமும் வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய அபிவிருத்தியின் மந்தநிலை பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் வேலாகப் பாய்ந்து இன்னும் வேதனைப்படுத்தியே நிற்கின்றது.

நன்றி உதயன்-சூரியகாந்தி (22.01.2012) *

அபிவிருத்தி மீது வீசப்படும் கற்கள்



இலங்கையின் அபிவிருத்தி ஆசியாவின் ஆச்சரியமாக்02014010100001 2030ஆம் ஆண்டில் மாற் றப்படும் என்ற தூர நோக்குடன் மஹிந்த அரசு பல் வேறு நெருக்கடிக்குள்ளும் சவால்களுக்குள்ளும் அதற்கான பணிகளை வேகப் படுத்தி வருவதாகப் பேசப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்குஅங் குள்ள உட்கட்டமைப்பு வசதிகளே பெரிதும் மூலகாரணங்களாக அமைகின்றன. இதில் இடங்களுக்கிடையிலான தொடர்பைப் பேணும் வகையில் போக்கு வரத்துத்துறை முக்கிய பணியாற்றுகின்றது.
இலங்கையின் அபிவிருத்தியில் இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் துறையாக பெருந் தெருக்கள் மற்றும் துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து போன்றவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
வரலாற்றின் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இருப்பதாக அரச தரப்பு மார் தட்டிக்கொள்கின்றது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ் சாலை அமைப்பு என வீராப்புப் பேசும் அரசு இன்னும் பல அதிவேக வீதிகளை நாட்டின் பல பாகங்களிலும் உருவாக்க வுள்ளதாக உறுதி கூறியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு வீதி வலையமைப்பு முக்கியமானதாக இருந்தாலும் ஏனைய துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அபிவிருத்தியைச் சமவேகத்தில் நகர்த்த முடியும்.
இலங்கையில் இப்போது இடம் பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துறைசார் கட்டமைப்புக்களுக்கிடையில் வேறு பாடுகளை உருவாக்குவனவாக உள்ளன.
இலங்கை அரசால் நடைமுறைப்ப டுத்தப்படும் அபிவிருத்தி வேலைகள், மக்களது அடிப்படைத் தேவைகள், அன்றாடத் தேவைகளுக்கு விடைகாணாது புதிய பாதையில் செல்வதை உணரமுடிகின்றது.
அண்மையில் 2011.11.27 அன்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் இப்போது பாவனையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியங்களே மக்களது தேவைகளுக்கும் அரசின் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை உணரவைத்துள்ளன.

அதிருப்திகளின் அதிவேகம்

தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் வாகனங்கள் வேகமாகச் செல்லும்போது அவற்றின்மீது கற்கள் வீசப்படுகின்றன.
நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன்பின் இத்தகைய கல்வீச்சுகளால் 57வாகனங்கள் சேதமடைந்ததுடன் 18 பேர் காயமடைந்துள்னர்.
வாகனங்களுக்கு கல்லெறிபவர்கள் தொடர்பில் விழிப்பு குழுக்கள் வீதிக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது கண்களைக் கட்டிவிட்டு கல்வீச்சுக்கள் தொடர்கின்றன.
வீதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கென விஷேடமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது கார்களும் 06 மோட்டார்சைக்கிள்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை இந்த வீதியில் ஏற்படும் விபத்துக்கள், இடையூறுகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாகனத்தில் பயணிப்பவர்கள் வேகக் கட்டுப்பட்டைப் பேணவேண்டும்,வீதி ஒழுங்கைப் பேணவேண்டும், விபத்துக் களிலிருந்து தப்பிக்கவேண்டும். இடைநடுவில் வாகனங்களை நிறுத்திக் கல்லெறி காரர்களை இவர்களால் ஒன்றும் செய்து விடமுடியாது.வாகனம் நிறுத்தப்பட்டால் அடுத்த கணமே விபத்துத்தான்.

நாய்களுக்கும் அதிருப்தி

சாலை பாவனைக்குவிடப்பட்டதும் திடீர் திடீரென விபத்துக்கள் நிகழ ஆரம்பித்தன. காரணம் புரியாது கண்காணிப் பாளர்கள் அதிர்ச்சியுற்றனர். அப்போது தெருநாய்கள் வீதியால் குறுக்கறுப்பது தெரிய வந்தது. ஏற்கனவே வீதிக்கு வேலி போடப்பட்டிருக்கிறது. ஆனால் நாய் களுக்கு அது போதாது. ஆடு அல்லது மாடு அதிலிருத்து தப்பிக்க முடியும். யானை கூட அண்மையில் இந்த வீதியைக் குறுக் கறுத்தது. சில இடங்களில் மண்அணை போடப் பட்டிருந்தாலும் எல்லா இடங் களுக்கும் அவை விஸ்தரிக்கப்டவில்லை.
நாய்களின் குறுக்கறுப்பால் வீதி திறக் கப்பட்ட அடுத்த நாளே வாகன விபத் தொன்று நடந்தது. திறக்கப்பட்ட 72 மணித் தியாலங்களுக்குள் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றன. 2 மாதங்களுக்குள் 80 விபத்துக்கள் பதிவாகியன. இவற்றில் பலவுக்கு நாய்கள் மீதே பழிபோடப்பட்டது. அவை யும் பலி கொள்ளப்பட்டன.
மஹிந்தவின் சிறப்பு உத்தரவு நாய்களைக் கொலை செய்யக்கூடாது என்று. ஆனால் அவரின் கனவான அதிவேக சாலையும் அதில் பயணிக்கும் வாகனங்களும் நாய்களைக் கொலைசெய்யும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளதை அவர் எந்தத் திட்டத்தைக் கொண்டு சீர்செய்யப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புதிதாக ஏதாவது திட்டம் அவருக்குள் இருந்து வரும்வரை.
இந்த நெடுஞ்சாலையின் நோக்கம் நகர்பகுதியில் ஏற்படும் வாகன நெருக் கடியைக் குறைப்பது, வேகமான போக்கு வரத்து, பயணிகள் இலகுவாகவும் குறைந்த செலவுடனும் பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளுதல் போன்றனவாகக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு தேவை இதுவல்ல. இப்போதைக்கு எங்களது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டு அடுத்த கட்டமாகச் சர்சதேச நிலையிலான அபிவிருத்திகளை நீங்கள் மேற்கொள்ளலாம். எங்கள் வயல்காணிகள், மேட்டுக்காணிகள் என்பவற்றின்மீதே நீங்கள் உல்லாச சவாரி செய்கின்றீர்கள். அதனால் ஆத்திரமடைந்தே நாங்கள் கற்களை வீசுகிறோம். எங்கள் வளமான காணிகள்மீதே இந்த வீதி அமைந்திருக்கிறது என்று கல்லெறி காரர்கள் எண்ணுகிறார்கள். இதற்காகவே வீதிக்குவந்து கற்களை வாகனங்கள் மீது அவர்கள் வீசுகிறார்கள்.
அபிவிருத்தியின் தேவையில் இதுவும் ஒன்றுதான். அது எப்போது தேவை என்பதும்,மக்களது இப்போதய தேவை என்னவென்றும் தீர்மானிப்பது அரசுதான். எனவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும். *


பணிஆரம்பம்:
2003
நிதி உதவி:
ஜப்பான் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசு.
நிர்மாணச் செலவு:
சுமார் 77 பில்லியன் ரூபா.
தூரம்:
கொழும்பு கொட்டாவிலிருந்து காலி பின்னது வவரை 100 கிமீ (கொட்டாவ, கஹதுட்டுவ, கௌனிகம, தொடங்கொட, லெவன்துவ, குருந்துகஹ, நாயபமுல்ல ஆகிய இடங்களைக் கடந்து பின்னத்துவ வரை)
தடை:
100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியாத வாகனங்கள், அதிகளவு புகையை வெளியிடும், முறையாக நிறுத்தற் கருவிகள் (பிரேக்) செயற் படாத வாகனங்கள் வெளிச்ச, சமிக்ஞை விளக்குகள் முறையாக இல்லாத வாகனங்கள், பாதசாரிகளுக்கு இந்தவீதியில் தடை
நுழைவாயில்:
08. கொட்டாவை, கஹதுடுவ, களனி கம, வெலிபின்ன, குறுந்துஹ, தாபிம, தொடங்கொடை, பத்தேகம, பின்னதுவ.
வேகம்:
80120 கிமீ(மணிக்கு)
கட்டணம்:

கார்,கெப்ரக வாகனம்,9 ஆசனங்கள் வரையுள்ள சகல வாகனங் கள், எக்ஸல் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 400 ரூபா,9 ஆசனங்களுக்கு அதிகமான பஸ் மற்றும் 33 ஆசனங்கள் கொண்டுள்ள சகல பஸ்களுக்கும் 700 ரூபா, 22 இற்கும் அதிகமான ஆசனங்களைக் கொண்ட பஸ், 6 சக்கர வாகனங்கள் மற்றும் எக்ஸல் 3 ஐ உடைய மோட்டார் லொறி, டிரக் வாகனம் ஆகியவற்றுக்கு 1500 ரூபா, ஒன்றாக இணைக்கப்பட்ட கோச் 2 உடன் பயணிக்கும் பஸ், எக்ஸல் 4 மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு 2000 ரூபா.



நன்றி உதயன்-சூரியகாந்தி (௨0௧௨. 2௨.01)

Saturday, January 14, 2012

மறக்கத்தெரிந்த மனமே...


"உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்''இந்த வார்த்தையை பழமொழியாகப் பார்ப்பதைவிட இப்போதெல்லாம் உண்மையான அனுபவங்கள் எண்ணிலடங்காதளவுக்கு பெருகிவிட்டன. சமூகத்தி முன்மாதிரியாக இருக்கின்ற சிலர் தமது சொந்த வாழ்க்கையில் பிழைவிட்டுவிடுகிறார்கள் என்பதும் மற்றுமொரு அனுபவம்.

ஆனாலும் சோற்றை உண்டபின் அந்தப் பாத்திரத்துக்குள்ளளேயே.... கழிப்பது, அதற்குக் காரணம் கற்பிப்பது எவ்வளவுக்கு நீதியானது என்பது சங்கடமான விடயம்தான். இருந்த போதிலும் இலங்கையில் இது சர்வ சாதாரணமப்பா.

நாட்டுக்காகப் பாடுபட்ட மனிதர்களில் முக்கியமானவர் பொன்சேகா என்று பேசப்பட்டது. மரணத்திலிருந்து மீண்டுவந்த ஒரு செயல்வீரன் என்று கூறிப் பொறுப்பில் இருக்கும்வரை அவர் முருங்கை மரத்தில் ஏற்றப்பட்டார். அவரிடம் இருந்து பெற்றாக வேண்டிய அனைத்தும் நிறைவுற்றதும் இப்போது அவர் கம்பி எண்ணுகிறார். இது அரசு ஒரு தனிமனிதனுக்கு இழைத்த துரோகம். அந்தத் துரோகம் பொன்சேகா குடும்பத்துடன் முடிந்துவிடலாம். அல்லது அவர் சேர்ந்த சிலருக்கு, வேதனையாக இருக்கலாம். ஆனால் ஓர் இனத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கும் இழைக்கும் துரோகம். இலகுவில் மறக்க முடியாது. ஒருவருக்கு மன்னிப்பையும், தீர்ப்பையும் அவர் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாறாக வரலாறோ, பாதிக்கப்பட்ட மக்களோ இவ்வாறானவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. துரோகம் இழைத்தவர்கள் தாமாக உருவாக்கிக்கொண்ட ஒரு பின்புலத்திலிருந்து மக்களை ஏமாற்ற முற்படுவது, ஏமாற்றுவது எந்த வகையில் நியாயமானது என்பது இன்றும் புரியாத விடயமாகியுள்ளது. காரணம் நாட்டினது அரசியலும், ஆட்சியும் அந்தளவுக்குச் சுயலாபமாக்கப்பட்டுள்ளன.

இந்த சுயலாப அரசியலில் இப்போது நுழைந்துள்ள மனிதன் ஓர் இனத்தின் துரோகி என வர்ணிக்கப்பட்ட, அரசின் செல்லப்பிள்ளை யாகியுள்ள கருணா அம்மான். இந்தப் பெயரை யாழ்ப்பாண மக்கள் தனக்கு வைத்ததாகக் குறிப்பிடும் இவர், அதை மக்கள் கூப்பிட்டால் தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார். இந்தப் பெயரை யாழ்ப்பாணமக்கள், ஐக்கிய சுதந்திர முன்னணியினருடன் இணைந்து திறம்படச்செயற்பட்டதற்காக சூட்டவில்லை என்பதைக்கூட உணர முடியாத மனிதனாக மாறியிருக்கிறார் கருணா. இவரின் மாற்றங்கள் தொடர்கின்றன.

1997.05.13 ஜெயசிக்குறு வெற்றி

விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக 1996, 1997 காலப்பகுதிகள் காணப் பட்டன. குறிப்பாக விடுதலைப் போராட்டதில் புதிய மரபு ரீதியான தாக்குதல் உத்திகளால் பலம் வாய்ந்த இலங்கை அரச படைகள் பின்வாங்கி ஓடிய சம்வங்கள் அதிகம் இடம்பெற்றன. இந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் கருணாவும் இடம்பெற்றிருந்தார். ஜெயசிக்குரு எதிர்ச்சமர் கருணா வுக்கு புதியதொரு பலத்தைத் தேடிகொடுத்திருந்தது.

இந்த துன்பத்தின் மீட்சியாக விடுதலைப் புலிகளின் மரபுவழி இராணுவ நடவடிக்கை அமைந்தது. இதற்கு வித்திட்ட பெருமை கூடுதலாக கிழக்குப் போராளிகளுக்கு உரியது. அங்கிருந்து ஆயிரம் போராளிகள் வரை வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானே தனது அணிப் போராளிகளையும் வேறு போராளிகளையும் கொண்டு படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரை வெற்றிகொள்ளக் காரணமானார்.

கருணாவின் போரிடும் ஆற்றல் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மதிப்பு மற்றும் மரியாதை ஒருவகையில் பின்வந்த காலங்களில் துரோகத் தனத்துக்குக் காரணமாகியது.

விடுதலைப் புலிகள் போரிடும் வலுவில் இலங்கை அரசுக்கு சவாலாக சம இராணுவ பலத்துடன் இருக்கின்றார்கள் என்ற செய்தி இவ்வாறான வெற்றிச் சமர்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இதனால் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளுடன் சமரசமுயற்சியொன்றில் ஈடுபடவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அவர்கள் கொண்டுள்ள கட்டமைப்புக்களை சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.

இலங்கை அரசின் ஆசையை, அவர்களது கபடத்தனத்தை நிறை வேற்றி வைப்பதற்கு புதிய மனித ராக விடுதலைப் புலிகள் அமைப் பில் இருந்தே கருணா செயற்படத் தொடங்கினார். இது அடுத்துவந்த காலங்களில் பல்வேறு நெருக்கடி களையும், ஒரு விடுதலை அமைப் பின் இருப்பையும் கேள்விக்குறி யாக்கியது எனலாம். இந்தக் காலப்பகுதியில் தன் இனத்திற்கே கருணா இழைத்த துரோகச் சம்ப வங்கள் சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான திடீர் மாறுதல் களின் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய பாரம்பரியங்களை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார் கருணா.

2006.11.27 மாவீரர்தின அறிக்கை

விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கிய கருணா மாவீரர் தினத்தையும் கொண்டாடினார். அப்போது அவர் மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ""தாயக பூமியில் சகோதர இனங்களுடன் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதுடன் உலக மயமாக்கலுக்கேற்ப சமூக பொரு ளாதார, அபிவிருத்தியுடன் தமக் கான கலை, கலாசா, பண்புகளுடனும், மேன்மையுடனும் வாழ வேண்டும். இதனை நோக்கிய எம் பயணத்தில் சமூக விடுதலையை விரும்பும் அனைவரும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாய மாகும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரம்பரியம், மக்களின் ஒற்றுமை பற்றிப் பேசிய இவர் இப்போது நவபாரம்பரியத்துக்குள் புகுந்துள்ள நிலையில் தனது நடனங்களை மறைக்க மக்கள் மத்தியில் தோன்றி தன்னை வேறு விதமாக அறிமுகப்படுத்த முற் படுகிறார்.

31.12.2011 நவபாரம்பரியம்

2012 புதுவருடத்தை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் இப்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சராகஉள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தனது பிரத்தியேக செயலாளருடன் நடனமாடி அசத்தினார். இது மட்டுமல்ல அண்மையில் அமைச்சர் மில்ரோய்வீட்டில் நடைபெற்ற நிகழ்விலும் கருணா கலந்துகொண்டு தனக்குரியதான நடனத்தை ஆடினார். அடிக்கடி வெளிநாடு செல்லும்போதும் இவர் தனது களிப்புக்குக் குறைவைப்பதேயில்லை. இப்போது கண்டவர்களுடனும் கட்டிப்பிடி யாட்டம் போடுகிறார் அம்மான்.

10.01.2012 பாரம்பரியம்

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் நாம் சிறு பராயத்தில் கண்ட பாரம்பரியங்கள் பழக்க வழக்கங்களைக்கூட இன்று மறக்க வைத்திருக்கிறது என மட்டக்களப்பு, சந்திவெளியிலுள்ள வேல்தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது கருத்தை வெளியிட்டார்.

முன்பெல்லாம் தென்னை வீட்டில் பாளை போட்டுவிட்டதென்றால் அதனை ""ஒரு பெண் வயதுக்கு வந்த சிறப்பான தினம்'' என்று கொண்டாடுவார்கள். ஆனால் அவற்றினையெல்லாம் தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர் என்றும் அவரது உரை அமைந்திருந்தது.

கருணாவின் புதிய ஞானம் எதைச் சொல்கிறது? சுபோகத் திற்காக ஒரு இனத்தைக் காட்டிக் கொடுத்த மனிதர் இன்று நியாயங்கள் பற்றியும் பாரம் பரியங்கள் பற்றியும் பேசுவது எந்த அளவில் ஏற்றுக்கொள்ளத் தக்கது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாது.

மறுபுறத்தில் இருப்பிடமற்ற மக்களும், ஒருநாளில் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே அல்லல்படும் மக்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு பசிபோக்க யாருமற்ற நிலையில் நாணற்புற்கள் மக்களின் மூக்குக்குள் நுழைவது புதிய அரசியலாகியுள்ளது.

நடப்பவற்றையும், நடக்க இருப்பவைபற்றியும் பேசுவதுகூட அர்த்தமற்றதாகிவிடுமளவுக்கு மனிதர்களின் சஞ்சரிப்பு தோன்றி யுள்ளது. எல்லாம் ""ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி'' கதையாகவே நிகழ்கிறது. கலிகாலத்தில் யார் என்ன செய்து விடமுடியும்???


நன்றி். உதயன் சூரியகாந்தி(15.01.2012)

Friday, January 13, 2012

நோய் மீதே வாழ்வு

இறுதிப்போர் முடிந்து மூன்று வருடங்களை எட்டும் நிலையில் வன்னியில் புதிய வடிவங்களில் மக்கள் வாழ்க்கையுடன் போரட வேண்டியவர்களாகவே இன்னமும் இருக்கின்றனர். வாழ்வியல் ரீதியாக இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறுவகையான நெருக்கடிகள், இருப்புக்கான கேள்விக்குறிகளை ஏற்படுத்திவருகின்றன. போரின் கோர முகங்களை மறந்து புதியவாழ்வுக்குள் நுழைய எத்தனிக்கும் ஒரு சமூகத்துக்கு, அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு அரசின் அபிவிருத்திப் பணிகள் இருக்கின்றன.

இன விடுதலைக்காகப் போராடிய அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களும் திட்டமிட்டு பழிவாங்கப்படும் சூழலில் வாழவேண்டியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். போரின்போது உறவுகள்,உடமைகளை இழந்து உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வன்மப்பிடியிலிருந்து எங்களை விட்டுவிடுங்கள் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்கின்றனர்.

போரின்போது மக்கள் எதிர்கொண்ட நிலைமைகள் இப்போது அவர்களுக்குத் தாக்கத்தைக் கொடுத்துவருகின்றன. குறிப்பாக இடவசதி,போதிய காற்றோட்டம்,சுத்தமான குடிதண்ணீர்,சுகாதாரமான கழிப்பறைவசதி,போசாக்கான உணவு போன்ற அடிப்படை தேவைகள் இறுதிபோர் நடைபெற்றபோது மக்களுக்குக் கிடைக்கவில்லை.

போரின்போது கொல்லப்பட்டவர்களின் உடலங்களைச் சுகாதாரமான முறையில் அடக்கம் செய்ய மக்களுக்கு அவகாசம் இருக்கவில்லை. தமக்குமுன்னால் இறந்தவர்களை உறவுகள் தாம் இருந்த பங்கருக்குள் போட்டு மூடிவிட்டு வேறு இடத்துக்கு நகர்வது மட்டுமே இயலுமான ஒன்றாக அப்போது இருந்தது. கைவிடப்பட்ட உடலங்களை காகங்களும் நாய்களும் உண்ணவேண்டி ஏற்பட்டது. அழுகிய உடல்களின் நாற்றமும், நச்சுகுண்டுகளின் புகைகளும் மக்களின் சுவாசமாக மாறின.

வன்னிப்போரில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களான கிளஸ்ட்டர் குண்டுகளும்,நச்சுக்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.

போரில் இருந்து மீண்டு நலன்புரி முகாம்களுக்கு சென்ற மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். போர்முடிந்து மக்கள் மீளக்குடியமர்ந்துள்ளநிலையில் இப்போது புதிய நோய்கள் பரவ ஆரம்பித்து மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியள்ளன.

ஏற்கனவே தொற்றுநோய்கள்,ஆபத்தான நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டப்பட்டது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்களுக்குக் காசநோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது வைத்திய அரிக்கைகளில் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வகைக் காய்ச்சலினால் கடந்த இரு வாரஙகளில்(01.01.2012)மட்டும் ஏழு பேர் மரணமாகியதுடன், இருவர் யாழ்.போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டனர். சுவாசத்துடன் தொடர்புபடும் இந்த காய்ச்சல் சகல வயதினரையும் தாக்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு அல்லது மூன்று நாள் காய்ச்சலுடனேயே இந்த மரணம் நிகழ்வதால் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே வைத்தியர்களை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வன்னியில் உள்ள பல மருத்துவமனைகள் போதிய அடிப்படைவசதிகள் இன்றியே இயங்கிவருகின்றன. இதனால் அந்த மருத்துவமனைகளில் மக்கள் சாதாரண காய்ச்சலுக்கு கூட மருந்தைப் பெறுவது சிரமமாக உள்ளது. இவ்வாறான நெருக்கடிகளுக்குள் மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தொடர்ந்தும் போராடவேண்டியுள்ளது.

நன்றி் உதயன்,சூரியகாந்தி-(08.01.2012)