Sunday, June 3, 2012

முறிகண்டிப் பிள்ளையார் யாருக்கு சொந்தமாவார்?




01 இந்து சமயத்தை  எவரும் பின்பற்ற  முடியாது எனக் கருதப்பட்ட காலத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றுக்கு பிரிட்டிஷ் விக்ரோரியா மாகாராணியே நன்கொடையாக ஆறு பேர்ச் நிலப்பரப்பை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது அந்தக் கடவுளின் புதுமையே.

02 செல்லப்பா கோயிலின் முழு உரிமையையும் பெற பொன்னுத்துரைக்கு எதிராக 1944 இல் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்.
எனினும் அது வெற்றிபெறாத நிலையில் பொன்னுத்துரை மனமுவந்து ஒரு பங்கை அவருக்குக் கொடுத்திருந்தார்.

03 விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்துமா மன்றம் கோயிலைப் பெறுப்பேற்றுள்ள நிலையில் பரம்பரை வழிவந்த மணிவண்ணன் என்பவர் கோயிலின் உரிமைகோரி இப்போது வழக்குத் தொடர்ந்துள்ளார்.


"அதில இறங்கி ஒரு கச்சான் பை என்றாலும் வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம் தானே அது ஒரு புதுமையான கடவுள். கும்பிட்டதாகவும் போச்சுது.''
வன்னியில் மட்டுமல்ல ஏ9வீதியைக் கடந்து வவுனியா நோக்கியோ, யாழ்ப்பாணம் நோக்கியோ செல்லும் பலர் அந்தக் கோயில் மீதான நம்பிக் கையையும் அங்கே விற்கப்படும் கச்சானுக்கான மவுசையும் என்றும் நினைவில் வைத்திருந்தனர்.
இற்றைக்கு 92 வருடங்கள் பழமையான அந்தக் கோயிலின் வரலாறு வெள்ளையர்களால் எழுதப்பட்டது எனலாம். பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக நிலைகொண்டிருந்த அந்தக் காலத்தில், இந்து சமயத்தைப் எவரும் பின்பற்ற முடியாது எனக் கருதப்பட்ட காலத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றுக்கு பிரிட்டிஷ் விக்ரோறியா மாகாராணியே நன்கொடையாக ஆறு பேர்ச் நிலப்பரப்பை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது அந்தக் கடவுளின் புதுமையே.
றோட்டு வேலை, காட்டில் மரம் வெட்டுதல், புகையிரதப் பாதை அமைப்புப் போன்ற பணி களுக்காகத் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களும், வடபகுதியைச் சேர்ந்தவர்களும் முறிகண்டியை அண்டிய காட்டுப் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. வேலைகளை இலகுபடுத்துவதற்காகவும் குடி தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அந்தக் காலத்தில் மூன்று கிலோமீற்றருக்கு ஒரு கிணறு என்ற கணக்கில் கிணறுகள் வெட்டப்பட்டன. அப்போது முறிகண்டிப் பகுதியில் வெட்டப்பட்ட கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் வடிவிலான கல் ஒன்றை பாலை மரத்தின் கீழ் வைத்து வழிபடத் தொடங்கினர் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த சிலர். கிணறு கோயிலுக்குக் கிழக்குப் பக்கமாக ஆறு அடி சுற்றுவட்டத்தில் இப்போதும் உள்ளது. எந்தக் கோடை காலத்திலும் நீர்வற்றாத, ஆழம் குறைந்த கிணறாகவே அது காணப்படுகிறது.
பின்னர் பிள்ளையாருக்கு ஒரு சிறிய கொட்டகை அமைக்கப் பட்டது. இதைக் கேள்வியுற்ற வெள்ளைக்காரர்கள் அங்கு சென்று அந்தச் சிலையை அகற்றி விட்டுப் பாலை மரத்தைத் தறிக்க முற்பட்ட வேளை அந்த மரத்தில் இருந்து இரத்தம் கொட்டியதாக வும் இதனை விக்ரோறியா மகா ராணிக்கு அவர்கள் தெரியப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சியுற்ற விக்ரோறியா மகாராணி அந்தப் பாலை மரத்தைத் தறிக்கத் தடை விதித்த துடன் அந்த இடத்தில் பிள்ளையாரைத் தொடர்ந்து வழிபட வசதியாக ஆறு பேர்ச் நிலத்தையும் அன்பளிப்புச் செய்தாராம்.
இதன்போது கோயிலைப் பராமரிக்கத் தொடங்கினார் சின்னட்டியார் என்பவர். இவர் அந்தப் பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்கள ஓவசியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். சின்னட்டியார் திருமணம் செய்யாததால் அவருக்கு வயது செல்ல அவரது மருகனான பொன்னுத்துரை என்பவருக்குக் கோயிலின் உரிமத்தை மாற்றிக் கொடுத்தார்.
1940 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாம் உலகப் போர் மூண்டிருந்த காலத்தில் சின்னட்டியாரின் தம்பியாரான செல்லப்பா என்பவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். இதன்போது முறிகண்டிக்கு வந்த அவர், தனது அண்ணனின் கோயிலை அவதானித்து அதன் வருவாயில் கண்வைத்துள்ளார்.
பொன்னுத்துரையின் உரிமத்தைத் தன்வசம் ஆக்குவதற்காக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். எனினும் சின்னட்டியாரால் உரி மம் பொன்னுத்துரைக்கு எழுதப் பட்டதால் அதனை வாதாடி வெல்ல முடியாது போக அண்ணனின் சொத்து என்ற அடிப்படையில் பொன்னுத்துரை என்பவர் மனமுவந்து செல்லப்பாவுக்கு என்பவருக்கு ஒரு வருட பங்கைக் கொடுக்க முன்வந்தார். (பங்கு ஒருவருடம் பொன்னுத்துரைக்கும் மற்றைய வருடம் செல்லப்பாவுக்குமாக மாறிமாறி வரும்). எனினும் பொன்னுத்துரையிடம் இருக்கும் அந்தப் பங்கையும் கைப்பற்றுவதற்காக செல்லப்பா தனது மகளை (தனலட்சுமி) 1948இல் பொன்னுத்துரைக்குத் திருமணம் செய்து வைத்து அன்றைய தினமேஉரிமத்தை மாற்றி எழுதிக் கொண்டார். பின்னர் பொன்னுத்துரை 1975இல் இறந்துபோக மாவிட்டபுரம் பகுதியில் இருந்து கல்விப் பணிக்காக வன்னிக்கு வந்திருந்த அரசரட்ணம் என்ற ஆசிரியர் முறிகண்டியானுக்குத் திருப்பணி செய்யத் தொடங்கினார். பின்வந்த காலப்பகுதியில் செல்லப்பாவின் ஆளுகையின் கீழ் கோயில் இருந்தது.
1990களில் முறிகண்டிக் கோயிலை விடுதலைப் புலிகள் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். கோயிலில் இருந்து கிடைக்கும் வருமானம் விடுத லைப்புலிகளால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லங்களுக்குப் பகிர்ந்த ளிக்கப்படவேண்டுமென முடிவு செய்யப்பட்டு அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டதாம். இந்தக் காலப்பகுதியில் கோயிலைச் சுற்றி கடைகளும் பிரபல்யம் ஆகின.
19 வருடங்களாக விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழி ருந்த முறிகண்டிப்பிள்ளையாரின்  உரிமம் 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தபின் இலங்கை இந்து மா மன்றத்தின் பெயரில் கொண்டுவரப்பட்டது.
உரிமை வழக்கு
செல்லப்பாவின் மகனான குணரட்ணம் குடும்பம் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வந்தனர். குணரட்ணம்  செல்லப்பா என்பவரின் மகன் மணிவண்ணன் (இப்போது கோயிலுக்கான உரிமம் கோருபவர்) என்பவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போர் முடிந்த பின்னர் வந்துள்ளார். இந்த நிலையில் கோயிலுக்கான உரிம வழக்கு மீண்டும் மணிவண்ணன் என்பவரால் தொடரப்பட்டுள்ளது. "முறிகண்டிப் பிள்ளையார் கோயிலைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும், பரம்பரை வழிவந்த தர்மகர்த்தா நானே'' என்று அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரிட்டிஷ் விக்ரோறியா மகாராணியால் வழங்கப்பட்ட காணிக்கான உரிமத்தில் பிள்ளையாருக்கு அன்பளிப்பு என்றே எழுதப்பட்டுள்ளது. அதனைப் பராமரித்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் பரம்பரை பரம்பரையாக சின்னட்டியாரின் வழிவந்தவர்கள் உரிமம் பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் இப்போதுள்ள மணிவண்ணன் என்பவரும் அந்த உரிமத்தைக் கோருகிறார் என்று முறிகண்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கோயிலைச் சூழவுள்ள கடைகள் அவை அமைந்துள்ள காணிகளும் குத்தகை அடிப்படையில் அந்தக் காலப்பகுதியில் பெறப்பட்டவையே. எனினும் குத்தகைப் பணம் அரசுக்கு ஒழுங்குமுறையாகச் செலுத்தப்படவில்லை. அந்தக் கடைகளையும் பரம்பரை பரம்பரையாக தகப்பன், பிள்ளைகள் எனக் கடையை உரிமைகோரி நடத்தி வந்துள்ளனர். இப்போது வீதி அகலிப்பு, கடைத்தொகுதி அமைப்புப் போன்ற வேலைகளுக்கு இந்த உரிமப் பிரச்சினை நெருக்கடியாக உள்ளது. எனினும் குத்தகை நிலத்துக்கு சரியாக குத்தகை செலுத்தப்படாமையால் அதை அவர்கள் உரிமை கோர முடியாது. அந்தக் காணிகளும் அரசுடமையாகவே கருதப்படுகிறன.
ஏ9 வீதியால் முறிகண்டிப் பிள்ளையாரைக் கடந்து செல் லும்  பெரும்பாலானவர்கள் வாகனச்சாரதிகள் அனைவருமேபிள்ளையாரைத் தரிசித்து ஒரு சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டுச் செல்வது ஒரு மரபாக இன்றுவரை உள்ளது. நீண்ட தூரத்துக்குப் பயணம் செய்யும் பயணிகள் பிள்ளையாரை வணங்கி அங்கே விற்கப்படும் கச்சானைக் கொறித்துவிட்டு வீட்டுக்கும் வாங்கிச் செல்லும் வழக்கத்தால் "முறிகண்டிக் கச்சான்'' பிரபல்யம் ஆனது.
பொதுவாக வழிப்போக்கர் களின் தேவைகருதி உருவாகிய பிள்ளையார், அவர்களாலேயே செல்வத்தைத் திரட்டி அனாதைச் சிறுவர்களை வளர்த்து வந்தார். விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தின்போது கோயிலுக்குக் கிடைத்த வருவாய் இவ்வாறே செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இப்போது போர் நிறைவுற்று கோயில் புனரமைக்கப்பட்டு ஒரு கிராமத்துக் கோயிலாகவும், பயணிகளின் வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் முறிகண்டிப்பிள்ளையார் உருவெடுத்துள்ளார்.
தனியாரிடம் இருந்து விடுதலைப் புலிகளிடமும் பின்னர் அவர்களிடம் இருந்து அரசிடமும் கைமாறியுள்ள உரிமத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் தனியார் ஒருவரின் முயற்சி, அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவா என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. 1948இல் கோயிலின் முழு உரிமத்தையும் பெறுவதற்காக தனது மகளைச் செல்லப்பா பொன்னுத் துரைக்குத் திருமணம் செய்து வைத்தார். அதன்மூலம் கோயிலின் வருவாயை அவரே முழுமை யாக்கிக் கொண்டார். இதுபோலவே மணிவண்ணனும் கோயிலின் வரு வாயை உரிமையாக்கிக் கொள்ளவே பரம்பரைச் சொத்து என வழக்குத் தொடர்ந்துள்ளார் என ஊர் மக்கள் குற்றம் சாட்டாத படிக்குப் பார்த்துக் கொண்டால் நல்லது.
எது எப்படியாயினும் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இதன் போதோ அல்லது ஓரிரு தவ ணைகளின் பின்னரோ முறிகண்டியாரைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு என்பது தெளிவாகிவிடும்.
*
நன்றி-சூரியகாந்தி (03.06.2012)

Sunday, February 19, 2012

வீடு வரும்வரை காய்ந்திருக்கும் மக்கள்


அன்று பலபேருக்கு நல்ல நாளாக இருக்க வேண்டும். ஏதோமுண்டியடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பின்னால் கூடிநின்று ஏதேதோபேசிக்கொண்டும் இருந்தார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமம் அது, இயற்கைத் தோற்றமுடைய அந்தக் கிராமத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. கிளிநொச்சி நகரத்திலிருந்து மேற்குப் பக்கமாக கிட்டத்தட்ட 20 25 கிலோமீற்றர் பயணித்தால் சென்றடையக் கூடிய கிராமத்தில் 420இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

வீதிப்போக்குவரத்துச் சரியாக முழுமைப்படுத்தப்பட இல்லை. மின்சார வசதியில்லை. சொல்லப் போனால், குக்கிராமம் போலத்தான் அது இருக்கிறது.

சனக்கூட்டம் ஏன் இவ்வாறு கூடியிருக்கிறது? என்று பார்ப்பதற்கான ஆர்வம் மேலெழுந்ததால் அருகில் சென்று பார்த்தேன். அங்கு, கொஞ்ச பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. தங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதா? என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதை நான் பார்த்தேன்.

93 பெயர்கள் அந்தப் பட்டியலில் அடக்கப்பட்டிருந்தன. இந்தத் தடவை அரச உத்தியோகத்தர்களுக்கும் அதில் இடம் வழங்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்தக் கிராமத்தில் 195 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுக் கணிசமானவை கட்டிமுடிக்கப்பட்டன. பெருமளவில் வழங்கப்பட்ட அளவுத் திட்டங்களுக்கு அப்பால் பயனாளர்களும் தங்கள் பணத்தைச் சேர்த்து 3 அறைகள், ஒரு கோல், ஒரு சமையலறை என்ற அமைப்பில் ஒரு உருப்படியான வீட்டைக் கட்டிமுடித்தார்கள்.

இந்த வீட்டுத்திட்டத்துக்காக வீட்டு உரிமையாளரின் பெயரில் காணி உறுதி அல்லது உரிமைப் பத்திரம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டதால் இத்திட்டத்திலிருந்து பலர் விலக்கப்பட வேண்டியவர்கள் ஆயினர்.

இதனால் அடுத்த கட்டத் திட்டத்தில் தமக்கு விரைவாக வீட்டுத்திட்டம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு அதிகாரிகளின் வரவையும் இந்த பெயர்ப் பட்டியலின் வரவையும் எதிர்பார்த்தபடியேபல மாதங்கள் கழிந்தன. இந்தக் கிராமத்தில் 2010 ஆரம்பத்தில் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு வருடங்கள் ஆனபோதும் மீதிப்பேருக்கு வீட்டுத்திட்டம் வந்துசேரவில்லை. (இப்போதும் பெயர்ப்பட்டியல்)

வீட்டுத்திட்டம் பற்றி அதிகாரிகளிடம் அந்தக் குடும்பங்கள் கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டங்கட்டமாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் குறித்த கிராமம் முதற்கட்டமான அதிக எண்ணிக்கையான வீடுகளைப் பெற்றுள்ளது. எனவே முதல் சுற்றில் எல்லாக் கிராமங்களுக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரேஇரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அப்போது உங்களுக்கும் வீடு கிடைத்துவிடும் என்ற பதில் கிடைத்தது.

நீண்டநாள் காத்திருப்புக்களின் மத்தியில் அந்த சனக்கூட்டம் கூடியிருந்த நாள் அதில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா எனத் தேடிய நாள் கடந்தவருடம் 12ஆம் மாதம் 15ஆம் திகதியாக இருந்தது.

ஓரளவுக்கு மனத்திருப்தி, வீட்டுத்திட்டம் வந்துவிடும் என்ற பெருமிதம் அவர்கள் மத்தியில் புரையோடியிருந்தது.

இன்று 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதுபற்றி எந்தவிதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அந்த மக்கள் நாளை கூட்டம் கூடுவார்கள். திட்டம் பற்றி அறிவுறுத்துவதற்கு அதிகாரிகள் வருவார்கள் என்று வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.

ஆனால் பெயர்விவரம் ஒட்டப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. யாரும் இதுவரை திரும்பிக்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. இப்போது அந்த ஊருக்குப் போனால் அந்தப் பெயர்ப் பட்டியலையும் காணவில்லை.

மீள்குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் தற்காலிக குடிசைகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வைக் கழித்துவிட்ட அந்த மக்கள் இப்போது ஒட்டப்பட்ட பெயர் விவரங்களையும் மறந்துவிட்டார்கள்.

யாராவது அதிகாரிகள் வந்தால் எங்களுக்கு வீட்டுத்திட்டம் வருமா? என்று கேட்டால் வந்துவிடும் என்றேபதில் கிடைக்கும். இரண்டு வருடங்களாக குடிசைகளில் இருந்தபடியேவீட்டுத்திட்டம் பற்றியும் கல்வீட்டில் எங்கள் புது வாழ்க்கை பற்றியும் கனவு கண்டபடியேஇருக்கின்றோம். இவற்றுக்கு உருப்படியான பதில் கிடைப்பதோஎங்கள் வாழ்க்கைக்கு விமோசனம் கிடைப்பதோஇப்போதைக்கு இல்லையென்றேஎமக்குத் தோன்றுகின்றது.

சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்கள் நாளுக்கு நாள் விலை@யறிக்கொண்டேஇருக்கின்றன. இந்த நெருக்கடிகளுக்குக் குடிசைகளில் இருந்தபடியேநாங்கள் முகங்கொடுக்கின்றோம். இதை பொறுப்பான எவரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை என்கின்றனர் அந்தக் கிராமத்து மக்கள்.

வன்னியில் பல கிராமங்கள் இந்தக் கிராமத்தைப் போலவேதான் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. ஆனால் அதற்கான தீர்வு, மக்களின் தேவைகள் பற்றி எவரும் சிந்திப்பதே கிடையாது.

பல கிராமங்களுக்கு முதற் கட்டமாக "சாம்பிளுக்கு' கொஞ்சக் கொஞ்ச வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. பரவலாக மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் இவ்வாறு கட்டிக் கொடுக்கப்பட்டதால் பல பேருக்குக் கணக்குக் காட்ட நல்ல வசதியாகவும் இருக்கிறது.

கிராம எண்ணிக்கை அடிப்படையில் எல்லாக் கிராமங்களுக்கும் இவை அமைந்துவிட்டதால் வெளியிடங்களில் இருந்து வருவோருக்கும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்கும் பட்டியலைத் தூக்கிப் போட்டு வீராப்பும் பேசமுடிகிறது.

ஆனால் பத்தில் ஒன்றேநிறைவேறிய கதை வந்துபோகும் பல பேருக்கு தெரியவே தெரியாது. தெரிவிக்கவும் அனுமதியில்லை. தெரியப்படுத்தவும் அதிகாரம் இல்லை. அறிக்கைகளில் சோடிக்கப்படும் கதையாகவே வகையாகவே அபிவிருத்திகள் தொடர்கின்றன.

பாவம், அரச நிர்வாகத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் தான் அவலப்படும் மக்களால் தினமும் ஏச்சுக் கேட்கும் பாவிகளாக உள்ளனர். அவர்கள் என்னதான் செய்துவிட முடியும். மேலதிகாரிகள் பணிப்பவற்றையும் சொல்பவற்றையும் கேட்டுத் தலையசைப்பதே அவர்களின் பணியாக உள்ளது.

எது எப்படியிருந்தபோதிலும் மக்களுக்கு ஆசைகளைத் தூண்டிவிட்டு அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்யாது அவர்களது கேள்விகளுக்குப் பதில் கூறாது தட்டிக்கழிப்பது அரசின் மற்றுமொரு அசமந்தப் போக்காக உள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் சுமை அதை ஈடு செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்பவற்றுக்கு மத்தியில் அரசு இதுவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் பொறுப்புக் கூறும் தன்மையிலிருந்தும் கடமையிலிருந்தும் விலகியிருப்பது எதிர்காலத்தில் அந்த மக்களின் வாழ்க்கையையேகேள்விக்குறியாக்கிவிடும்.

இன்றுவரும் நாளைவரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உருப்படியாக என்று வரும் என்பதையாவது சொல்லிவிட்டால் அவர்கள் தம்பாட்டில் இருந்துவிடுவார்கள். யுத்தத்தின்போது இருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு இதிலென்ன அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கப் போகின்றது.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் அரசிடமிருந்து ஏதாவது கிள்ளித் தெளிக்கப்பட்டால் அது மட்டுமே அவர்களுக்குச் சொத்தாக மாறும். கிள்ளல்கள் தொடரும் நிலையில் எப்போதுதான் தெளிப்பார்களோ?

அடிபட்டு நின்று தங்கள் பெயர்களை வாசித்த அந்தக் கூட்டத்தினர் இப்போது அந்தப் பக்கமே வருவதில்லை. மன உளைச்சலில் தங்கள் வேலைகளைப் பார்த்தபடி வீடுகளுக்குள்ளேமுடங்கிக் கிடக்கின்றனர். அரசு தமக்கான கடமைகளைச் செய்துகொண்டேஇருக்கின்றது. மக்களுக்காக அல்ல தமக்காகவே. *

நன்றி உதயன்-சூரியகாந்தி (19.02.2012)

Saturday, February 11, 2012

நியாயம் கிடைக்குமா ? ஏங்கும் விவசாயிகள்


""ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம்.'' "நாளைக்குப் பாற்கஞ்சி...''

""சும்மா போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.''

"இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே''

முருகேசனின் கனவு மழையோடு கரைந்துபோக ராமு ஏதுமறியாதவனாய் தன் விருப்பத்தையே கேட்டுக்கொண்டு இருந்தான்.

"அநேகநாள் பழக்கத்தினாலே நாளைக்கு என்று மட்டுமே அவளால் சொல்லமுடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றில் நெருப்பை அள்ளிக்கொட்டியது.''

--

ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தின் வாழ்வைச் சித்தரிக்கும் இந்தச் சிறுகதை ஈழத்தில் உருவான ஒரு அற்புத படைப்பு. சி.வைத்திலிங்கத்தின் எண்ணங்கள் இளையோடிய இந்தச் சிறுகதை எல்லோர் மனதிலும் பொறிபோலத் தைப்பது தவிர்க்க முடியாதது.

ஒரு ஏழை விவசாயியின் கனவுகளையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டுசெல்லும் இந்தக் கதையில் ராமு என்ற சிறுவனின் பாத்திரப் படைப்பும் அவனது ஏக்கமும் உணர்ச்சிபூர்வமானது.

இன்று இப்படித்தான் பல விவசாயக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஏக்கத்துடன் கழிக்கின்றனர். அவர்களது ஆசைகளும் கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் ஏதோஒரு கெடுதல்களால் நெருப்பில் பொங்குவதுபோல மாறிவிடுகின்றன.

நவநாகரீகம் வளர்ந்துவிட்ட இன்று விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நெருக்கடியே தோன்றியுள்ளது. அவர்கள் ஏனைய வாழ்க்கைத் தேவைகளுக்காக ஒவ்வொருநாளும் போராட வேண்டியவர்களாகவே மாறியுள்ளனர்.

கிளிநொச்சியில் ஒரு விவசாய குடும்பஸ்தர் தனது நாளாந்த வாழ்க்கையைப் பூர்த்தியாக்குவதற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்கும் சவால்களையும் விவரிக்கும்போது, ஈழத்து எழுத்தாளர் சி.வைத்திலிங்கம் படைத்த "பாற்கஞ்சி'' படைப்பு ஞாபகத்துக்கு வருவது தவிர்க்கமுடியாமல் போயிருந்தது.

கிளிநொச்சியில் காலபோக நெற்செய்கைக்கான அறுவடை முடிவுற்றதும் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் தெரிவித்திருக்கிறார்.

ஏழை விவசாயிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். இருப்பதற்கு, உறங்குவதற்கு, விருந்தாளி வந்தால் உபசரிப்பதற்கு ஒரு உருப்படியான வீடற்ற விவசாயிகளுக்கு தாம் அறுவடை செய்யும் நெல்லை நியாயமான விலைக்குச் சந்தைப்படுத்த முடியும் என்ற செய்தி அடுத்த ஆண்டில் அவர்களின் முயற்சியை இரட்டிப்பாக்கும் என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலங்களில் இப்படியான நெல் கொள்வனவு எந்தளவுக்கு நடைபெற்றது என்பதை அந்த ஏழை விவசாயி புரட்டியபோது அந்தக் கனவுகளெல்லாம் அவர்களிடத்திலிருந்து சட்டென்றேகலைந்துபோவதாகத் தென்பட்டது.

"இந்த ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைமூலம் கிடைக்கும் நெல்லை விவசாயிகளிடமிருந்து தீர்மானிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் கடந்த வருடம் காலபோக நெற்செய்கையின்போது நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி நெல்லைச் சந்தைப்படுத்த முடியும். இதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி.

கடந்தவருட காலபோக நெற்செய்கையின்போது சிவப்புநாடு ஒரு கிலோ 28 ரூபாவும் சம்பா 32 ரூபாவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி நெல் கொள்வனவு இடம்பெற்றால் விவசாயிகளுக்கு மூடை ஒன்றுக்கு 1,680 ரூபா கிடைக்கும். சம்பாவுக்கு 1,920 ரூபா கிடைக்கும். தனியார் இவற்றைவிட கூடுதல் விலை கொடுத்துக் கொள்வனவு செய்தால் விவசாயிகள் தமது உற்பத்தியை நல்ல வகையில் சந்தைப்படுத்தலாம். ஆனால் ""தவிச்ச முயல் அடிக்கும்'' தனியார் துறையினர் நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து மிகக் குறைவான விலையிலேயே கொள்வனவு செய்ய முன்வருகின்றனர்.

நாளாந்த வாழ்க்கையுடன் போராடும் விவசாயிகள் தம்மிடம் இருக்கக்கூடிய பெறுமதி வாய்ந்த ஏதோஒரு பொருளை அடகு வைத்தோஅல்லது ஒரு நம்பிக்கையானவரிடம் கடன் பெற்@றா விவசாயத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு உடனடித் தேவையாக இருப்பது அடகை மீள்வதோஅல்லது கடனைச் செலுத்துவதோதான். அதற்காக அறுவடை செய்த நெல்லை உடனடியாக விற்றேஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. மாறாக வீட்டில் நெல்லைப் பராமரிப்பதற்கு களஞ்சியவசதிகூட அவர்களிடம் இல்லை. இதனாலும் அகப்படும் விலையில் நெல்லை விற்கவேண்டியுள்ளது.

அந்த ஏழை விவசாயி குறிப்பிடுவதும் இதுதான்.

ப.நோ.கூ. சங்கம் இதுவரை காலமும் எங்களிடம் நெல்லைக் கொள்வனவு செய்தது. எப்படியென்றால் விவசாய அங்கத்தவர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நெல்மூடைகள் என்ற அடிப்படையில் (மிகச் öசாற்ப அளவே) தான். அதற்கும் நீண்டநாள் காத்திருக்க வேண்டும். நெல்லைக் கொடுத்துவிட்டால் அதற்கான பணத்தைப் பெறுவதற்கு நீண்டநாள் அலைய வேண்டும். மிகுதி நெல்லை வேறு யாருக்காவது அவர்கள் கேட்கும் விலையில்தான் கொடுக்க வேண்டும். இப்படி இழுபறிப் படுவதைவிட ஐஞ்சுபத்து நட்டம் வந்தாலும் யாருக்காவது முழுவதையும் கொடுத்து காசுகையில் கிடைத்தால் அதுதான் எமக்கு உதவியாக இருக்கும். நியாய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய சங்கங்கள் முன்வந்தால் மட்டும் போதாது. எங்களது தேவைகளையும் கஷ்டங்களையும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட்டால் அதுதான் எங்களுக்கு உதவியாக இருக்கும். அப்போதுதான் அவர்கள் கேட்டதைப்போல் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கமுடியும். கடன் தொல்லையாலும் அன்றாட வாழ்க்கைக்காகவும் எப்படியோ நெல்லை விற்றாக வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் ஒரு நல்ல தீர்வை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இப்போதைக்குப் பொருத்தமானது என்கிறார் அந்த ஏழை விவசாயி.

உண்மையில் வன்னியில் பெரும்பாலான இடங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்றுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் இன்றும் குடிசைகளிலேயே தங்கியுள்ளனர். இவர்களது தேவைகள், எதிர்பார்ப்புக்கள் பூரணப்படுத்தப்படாது அரசின் அபிவிருத்திகளை அரசியல் போக்கில் செல்கிறது.

இந்த நிலையில் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கக் கூடியவர்கள் தங்கள் உற்பத்தியை நியாயமான விலையில் சந்தைப்படுத்துவதற்கு பக்கபலமான ஒரு வழியையே எதிர்பார்க்கின்றனர். பெயரளவில், பகுதியளவில் அவர்கள் தங்கள் உழைப்பின் ஊதியத்தை எதிர்பார்க்கவில்லை. இதற்கேற்பவே செயல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

வன்னியிலும் முருகேசனைப் போலவும் காமாட்சியைப் போலவும் ராமுவைப் போலவும் பலர் வாழ்கின்றனர். இவர்களது ஆசைகளும் எண்ணங்களும் கற்பனைகளும் தினமும் சிதைந்து போகின்றன. முருகேசனது கனவுகளை ஒரு மழை அழித்துச் சென்றது. அது முருகேசனின் கனவு மட்டுமல்ல. ராமுவின் பால்கஞ்சி என்ற அவாவையும் அடியோடு அழித்துவிட்டிருந்தது. இதுபோல வன்னியில் இப்போது மழை மேகங்கள் ‹ழ்ந்திருப்பது பல விவசாயக் குடும்பங்களின் கனவுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கின்றது. இயற்கையின் நியதிகளை மனிதனால் வெல்லமுடியாத போதும் மனிதனது ஆசைகளையும் தேவைகளையும் உரிமைகளையும் இன்னொரு மனிதனால் புரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படையில் ஏழை விவசாயிகளின் எதிர்கால வாழ்வுக்குப் பொருத்தமான அபிவிருத்தி நோக்கிலான திட்டமொன்று கட்டாயமாகின்றது. பெயரளவிலோ சொல்லளவிலோ சில காரியங்களை அறிவிப்பதை விடுத்து மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பூரணம் அடையக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதுமே இப்போதைய தேவையாக உள்ளது.

அரச அதிபரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ப.நோ.கூ. சங்கங்கள் முழு அளவில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லைக் கொள்வனவு செய்யுமா என்பது அவர்களிடத்திலே கேள்வியாக மாறியுள்ளதால் உண்மையான கரிசனையுடன் இந்த அறிவிப்பைச் செயற்படுத்த வேண்டியது தார்மீகப் பொறுப்பாக உள்ளது. இதுவே ஏழை விவசாயிகளின் கனவுக்கு நல்லதொரு விடையாக அமையும். *

நன்றி-உதயன் சூரியகாந்தி (12.02.2012)

Monday, February 6, 2012

ந(வ)ல்லிணக்கம் ஆகிவிடுமோ


சுட்ட மண்ணும் பச்சமண்ணும் ஓட்டுமா கூறப்பா, சுண்ணாம்பும் தயிரும் சேர்ந்தா திங்கிறவன் யாரப்பா' இது உணர்ச்சி கவிஞர் காசியானந்தனின் வரிகள். இரு இனங்களுக்கிடையே எந்த வகையிலும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்பதை இந்தப் பாடல் வரிகள் எடுத் தியம்புகின்றன. இலங்கையில் இன நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சொற்கள் இப்போது தாராளமாகப் பாவிக்கப்படுகின்றன. அறிக்கைகளிலும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் திருவாய் களிலும் இவற்றுக்குப் பஞ்சமில்லை.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கென பல்வேறு மட்டங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய கருவியாக இராணுவத்தினர் பயன்படுத் தப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கவனிப்பர் என ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டதுடன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிர்வாகமும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் இராணுவத்தின் அனுமதியும், பிரசன்னமும் அவசியமானதாகின்றது. அத்துடன் நிகழ்வுகளுக்குச் சில முன் மாதிரியானவர்களை அழைப்பதும் கட்டுப்பாடுகள் எழுதப்படாத சட்டமாகியுள்ளன.

கடந்த மாதம் கிளிநொச்சியில் இரா ணுவச் சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் செய்துவைக்கப்பட்டது. இதனை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அரசு பிரசாரப்படுத்தியது.

கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இராணுவச் சிப்பாய்க்கும், மலையாளபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியான சந்திரசேக ரன் சர்மிளாவுக்கும் ஜனாதிபதி செயலகம் இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் முன்னாள் பெண் போராளியின் பெற்றோர் இனக்கலவரம் இடம்பெற்ற போது மலைநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். இவர்களுக்கு சிங்கள மொழிபேசத் தெரியும். அதுமட்டுமல்ல தாய் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் மற்றும் நாளாந்த கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் இவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள்.

இந்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திய இராணுவச் சிப்பாய், பெண்போராளி பம்பைமடு தடுப்புமுகா மில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவரிடத்தில் பேசிப்பழகி காதல் கொண்டுள்ளார். சற்றுச் சிங்களம் பேசத்தெரிந்த பெண் போராளியும் அதைச் சம்மதித்துள் ளார். பெண் போராளி தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கபட்டபோது இராணுவச் சிப்பாயும் கிளிநொச்சி இராணுவ முகாமுக்கு மாற்றம் பொற்றுள்ளார்.

பின்னர் போராளிப் பெண்ணின் பெற் றோருடன் இராணுவத்தினர் பேசிப்பழகி அவர்களிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். தொடர்ந்து இராணுவத் தலைமை அதிகாரி ஊடாக ஜனாதிபதி செயலகம் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து பிரசாரத்துக்கு வாய்ப்பாக இதனைக் காட்டியுள்ளது.

அத்தோடு தமது காரியத்தை நிறுத்திவிடாத இராணுவத்தினர் கிளி. மத்திய கல்லூரியில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் மாணவர்களை ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் புதுமணத் தம்பதியரை விசேட விருந்தாளர்களாக அழைத்து அவர்களது அனுபவங்களையும் மாணவர்கள் மத்தியில் பகிரச் செய்தனர்.

அத்துடன் அவர்களைக் கௌரவிக்கு மாறும் இராணுவத்தினர் மாணவர்களைப் பணித்துள்ளனர். இவர்கள் ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவுக்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் ஜனாதிபதி செயலகமும் திட்டமிட்டு செய்த இந்த நாடகத்தை தமிழ்ச் சமூகமும், மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. இதற்காக நலிந்த பிரிவு மக்களை சிங்கள ஆட்சியாளர்கள் கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் இது போன்ற முயற்சிகள் பல இடம்பெற்றுவரு வதாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகளைக் குறிவைக்கும் இராணுவத்தினர் அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சம்மதம் வாங்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரி விக்கப்படுகின்றது.

இராணுவ மயப்படுத்தப்பட்ட வன்னிப் பகுதியில் குற்றச் செயல்களும் பிறழ் நடத்தைகளும் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் மத்தியில் தவறான தமிழ்க் கலாசாரத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பரப்புவதும், திணிப்பதும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இது விடயத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது. எத்தனை திருமணங்கள் நடந்தாலும் சுட்ட மண்ணும் பச்சமண்ணும் ஒட்டியதாக இல்லை. பிரச்சினைகளும், முரண்பாடு களும் வலுக்கவேசெய்யும்

அரசு நேரிய வழியில் சென்று அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாகக் குறுக்கு வழிகளைக் கையாண்டு தமிழ் சமூகத்தின் இருப்பைச் சீர்குலைக்க முற்படுகிறது என்பதே அவர்களது செயற்பாடுகளிலிருந்து தெளிவாகிறது. *

நன்றி-உதயன் சூரியகாந்தி (05.02.2012)


புரட்டிப் போடும் ஞாபகங்கள்


நடுஇராத்திரியும்

15வயது சிறுவனும்

பேரிரைச்சல்... ஓட ஆரம்பித்த நிகேஷ் நிற்கவே இல்லை. சத்தம் அவனையே குறிவைத்துக் கலைத்தது. பங்கருக்குள் போக அவன் தயாரில்லை. காரணம் அவனோடு நேற்றுக் காலைவரை விளை யாடிக் கொண்டிருந்த புதிய நண்பனும் அவனது குடும்பமும் பங்கருக்குள்ளேயே அன்று மாலை மாண்டுபோன ஞாபகம்.

சற்றுநேரத்திலே செவிப்பறை முழங் கும்படியாக பெரும் சத்தங்கள். மின்னல் வேகத்தில் ஏதேதோ வானைப் பிழந்தன...

சிறிதுநேர அமைதியின்பின் முனகல் சத்தமும், அழுகுரல்களும்....இரத்தமும் சதையுமான காட்சிகள்...அம்மா!! என்ற சத்தத்துடன் திடுக்கிட்டு விழித்துவிட்டான் நிகேஷ்.

இதுவரை அவனது மனம் வன்னி இறுதிப் போரின் ஒரு பகுதியை திரை யிட்டுக்கொண்டிருந்தது... காட்சிகளைப் பாரத்து சகிக்கமுடியாமல் திடுக்கிட்டு விழித்தவனுக்கு அன்றிரவு நித்திரை மீண்டும் வரவேஇல்லை.

வன்னியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 12 வயதாக இருந்தபோது நிகேஷ் எதிர்கொண்ட காட்சிகளும் துன்பங்களும் இப்போது மனதில் காட்சிகளாகப் பதியப்பட் டுள்ளன.

இடப்பெயர்வின்போது சந்தித்துக் கொண்ட அவனது நண்பனும் குடும்பத்தி னரும் விமானக் குண்டுவீச்சில் இறந்து போக, அவர்களை அந்தப் பங்கருக் குள்ளேயே போட்டுமூடிவிட்டு வேறு இடத்துக்குச் சென்றபோது நிகேசுக்கு அந்த காட்சியும் சம்பவமும் பெரிதாகப் படவில்லை. காரணம் அடுத்து எங்கள் உயிர் என்பது இந்தச் சிந்தனைகளை அவன் மத்தியிலோ அல்லது இடம் பெயர்ந்து கொண்டவர்கள் மத்தியிலோ இருந்து நீக்கியிருந்தது.

இப்போது 10ஆம் தரத்தில்படிக்கும் நிகேஷ் மூன்றேமூன்று நாள்மட்டும் பழகிய தனது நண்பன் குடும்பத்தோடு மரணித்து விட்டதை மனதில் கொண்டு திரிகிறான்.

இருந்தாலும் அம்மா! என்று அலறிக்கொண்டு நித்திரையிலிருந்து எழுந் தவனை அவனது தாயார் என்னப்பன்! என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் ஒன்றுமில்லை என்பதே.

வன்னிப்போர் முடிந்துவிட்டது. நாட்டில் அமைதி நிலை நாட்டப்பட்டுவிட்டது. தமிழ் மக்களுக்கு விமோஷனம் வந்து விட்டது என்று அரட் டிக்கொள்ளும் ஆட் சியாளர்களது கோணத்தில் நிகேஷின் கனவை எப்படிபார்ப்பது?

இப்படித்தான் தங்கள் உறவுகளை இழந்தவர்களும், தொலைத்தவர்களும், இறுதிப்போரை எதிர்கொண்டவர்களும் ஒவ்வொரு இர வையும் கழிக்கின்றனர் என்பதை எவர்தான் உணருவாரோ???

மரணச்சடங்கும்

ஒரு தாயின் புலம்பலும்

கொண்டாட்டங்கள் நடந்தால் போகா விட்டாலும் செத்தவீட்டுக்கு கட்டாயம் போகவேணும். இது எம்மில் பலபேரது அபிப்பராயம். துன்பத்தில் தோள்கொடுப் பதுதான் இந்த முயற்சியாக இருக்கவேண்டும்.

வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்த பலருக்கு விரக்தி கூட களியாட்டங்களை விலக்களிக்குமாறு பணிக்கின்றது.

வயதான ஒருவரின் மரணச் சடங்கில் ஒரு தாய் ஒப்பாரி சொல்லி அழுது கொண்டிருந்தாள். ""ஐயா! என்னவிட்டு போயிட்டியே! நான் என்னசெய்வேன்! அம்மா அழாமல் இருங்கோ நான் வந்திடுவன் எண்டு செல்லிட்டு என்னவிட்டு எங்கடா போய்ட்ட?.....'' என்று அவளின் புலம்பல்நீண்டது...

அந்த மரணச்சடங்குக்கு சம்மந்தமே இல்லாத இந்த ஒப்பாரி அவளின் மகன் போரில் கொல்லப்பட்டதையும் அவனுக்காக தான் ஒரு கடமைகூடச் செய்ய வில்லை என்பதையும் வெளிக்காட்டியது.

போருக்குப் பின்னர் எத்தனை தாய்மார் இப்படிப் புலம்புகிறார்கள் என்பதை யார் கருத்தில் கொள்கிறார்கள்?

தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சரி வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களும் சரி சுற் றுலா நோக்கிலேயே போர் நடைபெற்ற பகுதி களைப் பார்வையிடு கின்றனர்.

போதாக்குறைக்கு யாழ்ப்பாணம் வந்த இந்திய முன்னாள் ஜனாதி பதி அப்துல்கலாம் கூட கனவு காணுங்கள் என்று தான் சொல்லிவிட்டு சென்றார். இந்த மக்கள் காணும் கனவுகளும் , ஏக்கங்களுக்கும் எந்த வகையில் இலட்சியம் ஆவது? கனவுகளும் புலம்பல்களும் தொடர்கின்றன. தென்னிலங்கையின் கொக்கரிப்பும் தொடர்கிறது.


நன்றி-உதயன் சூரியகாந்தி (05.02.2012)