Sunday, June 3, 2012

மே 18 மறந்தவர்களும் மறக்காதவர்களும்



காலை 8.30 மணி, அவ சரமாக தொலை பேசிக்கு 3 தவறிய அழைப்புக்கள் வந்திருந்தன. புதிய நம்பராக இருந்ததால் திருப்பி ஒருமுறை மிஸ்கோல் அடித்துவிட்டு தொலை பேசியை வைத்துவிட்டேன். அந்த நம்பரில் இருந்து மீண்டும் கோல் ""கம்ப்பஸ் பொடியன் ஒரு வனுக்கு யாரோ அடித்துப் போட் டாங்களாம். மண்டை உடைந்து கொஸ்பிற்றல்ல அற்மிற் பண்ணி இருக்கு'' இது தான் அந்தப் புதிய நம்பரில் இருந்து எனக்கு கிடைத்த செய்தி. 
அவசரமாக, நடந்த சம்பவத்தை பத்திரிகை நண்பர் ஒரு வருக்குத் தெரிவித்து விட்டு எனது நாளாந்த கடமைக்குத் திரும்பினேன். அப்போது எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படுமென நான் நினைத்திருக்கவில்லை.
முப்பது வருட ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு வன்னியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே நாள்களில் மனிதப் பேர வலம் நிகழ்ந்து கொண்டிருந்தது. உலக நாடுகள் பார்த்திருக்க, உலகெங்கும் செய்திகள் பரவிக் கொண்டிருக்க கூட்டம் கூட்ட மாக எங்கள் உறவுகள் கொல்லப் பட்டார்கள், காயப்படுத்தப்பட்டார்கள். உணவின்றி, நீரின்றி இருப்பிடமின்றி, உடுக்க மாற்று உடையின்றி அவர்களின் அவலம் கண்முன்னேநிகழ்ந்து கொண்டிருந்தது.
இந்த அவலத்தை தடுக்க யாரும் முன்வராவிட்டாலும் வன்னியில் தமிழ் மக்களுக்கு பேரவலம் நடந்து கொண்டு இருக்கின்றது என்பதை பலர் பேசிக்கொண்டார்கள். ஊடகங்கள் தங்களின் செய்தித் தளமாக அந்த களமுனையையே பார்த்துக்கொண்டிருந்தன. சிலர் உண்ணாவிரதம் இருந் தார்கள். சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்,  சிலர் தங்கள் உயிர்களையே தீயிட்டுக் கொழுத்திக் கொண்டார்கள். எந்த நிலைமைகளிலும் இலங்கை அரசு தனது இனவாத அழிப்பில் இருந்து சற்றும் விடுபடாமல் சர்வதேச நாடுகளின் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டுவந்தது. தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வை நிர்க்கதியாக்கியது.
இது போன்ற துயரமான, அவலமான சம்பவங்களை அறியாத தெரியாத எவரும் இலங்கையிலோ அல்லது புலம்பெயர் தமிழர்கள் வசிக்ககூடிய நாடுக ளிலோ, அயல் நாடுகளிலோ இருந் திருக்க முடியாது என்பது எனக்கு தெரிந்த உண்மை.
ஆனால் துயரம் தோய்ந்த யாழ்ப்பாணத்தில்  வீதிகளிலும் வீடுகளிலும் வைத்து தெருநாய் களை சுடுவதைப் போல் நாளுக்குநாள் பலர் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தில்  போரை எதிர் கொண்டு இன்னும் வடு அழியா மல் இருக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் முள்ளிவாய்க்காலை மறந்து என்னிடம் புதினமாக வினவியதுதான் எனக்கு காத்திருந்த அதிர்ச்சி.
பல்கலை மாணவன் தர்ஷானந்த் நடு வீதியில் வைத்து இனம் தெரியாதவர்களினால் தாக்கப் பட்ட செய்தியை நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட அவர் ""கம்பஸ் பொடியங்கள் இப்படித் தான், ஏதாவது அவங்களுக்க சண்டையா இருக்கும். அடிபட்டு மண்டையை உடைத்திருக்குங்கள்'' இதுதான் அந்த மாணவன் தாக்கப்பட்டது தொடர்பில் அவரது காரணம்.
எனக்கு அவர் கூறுவது ஏதோ எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது. ""இல்லை அவன் கொஞ்சம் முற்போக்கான பொடியன். வெளியில ஒழிவு மறைவு இல்லாமல் எதையும் பேசிக் கொள்பவன். கொஞ்சம் வாயாடி, ஆனால் தனிப் பட்ட பிரச்சினைகளில் அவன் சண்டைக்குப் போகமாட்டான்'' என்று எனது விளக்கத்தை அவருக்குக் கொடுத்தேன்.
அதற்குப் பிறகு ""அப்படியானால் ஏன் அடிச்சவங்கள்?'' அவரது கேள்வி பல கேள்விக் குறிகளுடன் இருந்தது.
""இன்று மே18 தானே'' என்று சின்ன வார்த்தையில் கூறினேன். அவருக்கு அது விளங்கவேஇல்லை. ""முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவால் கம்பஸில் நினைவு நிகழ்வு செய்ய ஏற்பாடு செய்திருப்பாங்கள். அதால பொறுக்காம யாரும் அடிச்சிருப்பாங்கள்'' என்றேன் அவருக்கு அதுவும் புரியவில்லை.
ஆச்சரியமாகவும், ஆத்திரமா கவும் இருந்தது. ஆனால் அவர் எதற்காக அப்படி இருக்கிறார்? இதில் ஏதாவது இரண்டாவது நிலைப்பாடு உண்டா? எனக்குக் கேள்விகள் எழ கதையை நிறுத்தி விட்டேன்.
போகும்போது ""இதுகளுக் கேன் இந்த தேவையில்லாத வேலை சும்மா படிக்க வந்தா படிச்சுட்டு போறது'' என்ற சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.
அவருக்கது சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம். அல்லது என்னிடத்தில் ஏதாவது கதை புடுங்க எண்ணியிருக்கலாம். ஆனால் அதை என் மனது ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. பதிலாக ஏன் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள்? இவர்களுக்கு உயிர் இல்லையா சொந்தம், பந்தம், பாசம் எதுகுமேஇல்லையா? மூன்று வருடங்களுக்கு முன்னர் இவர்கள் பத்திரிகை பார்க்கவில்லையா? வானொலி கேட்கவில்லையா? குண்டுச் சத்தங்களை உணரவில்லையா? குழந்தைகளும், சிறுவர்களும் துடிதுடித்து இறந்து போனதை கேள்விப்படவே இல்லையா? திரும்பத் திரும்ப கேள்விகள் மீண்டுகொண்டே இருந்தன.
எங்களது உணர்வுகளை முழு மையாக வெளிப்படுத்துவதற்கு, உரிமைகளை ஏற்பதற்கு தகுதியற் றவர்களாக நாங்கள் இருக்கின் றோம் யார் என்ன செய்தாலும் எது செய்தாலும் அதை அரசியலோ டும் பகைமையோடும் தொடர்பு படுத்துவதற்கென்று பலர் காத்திருக்கின்றார்கள். இது காலங்காலமாக எங்கள் இனத்துக்குள் ளேயே உருவாகிப்போன ஒன்று. இதனால் சில உணர்ச்சிவசப்பாடுகளை நாங்கள் வெளியேபலர் முன்னே வெளிப்படுத்திவிட முடியாது. அவையடக்கம், பொது அடக்கம், பாதுகாப்பு என்று எல்லாத் திசைகளையும் பார்க்க வேண்டியுள்ளது.
இருந்த போதும் நடந்தவற்றை மறந்து புதிய உலகிற்குள், அடக்கு முறைக்குள், அதிகாரத்துக்குள் வாழ்வதற்கு எண்ணவே  முடியாதிருக்கின்றது. இந்த சூழலில் மூன்று வருடத்துக்கு முன் நடந்து போன இனப் படுகொலையை ஒரு இனத்தின் வாழ்வியல் மீதான நெருக்குதல்களை எப்படி மறந்துவிட முடியும்? ஒவ்வொரு சம்பவங்களையும் நினைக்கும் போது இந்தக் கணம் நடந்தது போல் தோன்றும் கொடுமைகளை எப்படி மனங்களில் இருந்து தூக்கி எறிவது? இது சாதாரண மனிதரால் எப்படி முடிகிறது?
அப்படியானால் அவர்கள் மீது சந்தேகம் தோன்றுகிறது. அவர்கள் மறக்கவில்லை. மறந்தவர்களாக நடிக்கிறார்கள். அதன் மூலம் அவர்கள் எதையோ உணர்த்த விரும்புகிறார்கள். எது எப்படி மறைக்கப்பட்டாலும் உண்மைகள் எப்போதும் விழித்திருக்கும். உணர்வுகள் அதைச் சொல்லக் காத்திருக்கும். இந்த உலகில் 2009 மே18 வரலாற்றுரீதியில் ஓர் இனப்படுகொலை நாள். இது எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் எங்கள் நெஞ்சினில் பதிந்திருக்கும். 
நன்றி-சூரியகாந்தி (20.05.2012)

வடக்கு, கிழக்கு படைகளின் பூமியாம்



நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் ஓரிடத்தில் வடக்குக, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைத்தல் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய போர் பொது மக்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இருந்தது. இது இப்போது இல்லாதொழிக்கப்பட்ட நிலையில் முழுமையான சுதந்திரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் பயங்கரவாதத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். இவர்களின் கனவை நனவாக்க ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டா.
 கொழும்பில்நேற்று (19.05.2012)இடம்பெற்ற போர் வெற்றியின் 3 ஆம் ஆண்டு நிறைவு  விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி கருத்தை அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளுக்கு பயந்து தாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் அவர் சவால் விடுத்தார்.
வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு அவர்களின் மூன்றாண்டுகளின் நினைவை அனுஷ்டிக்கும் நிகழ்வுகள் வடக்குக் கிழக்கில் நடைபெற்ற போது அவற்றை நடைபெறாமல் தடுக்க அரச தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதோடு மக்கள் மீதான கெடுபிடிகளையும் அதிகரித்திருந்தது.
ஆனால் பலபத்தாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாளை போர் வெற்றி விழாவாக பெரும் எடுப்பில் சிங்கள தேசம் கோலாகலமாக நேற்றுக் கொண்டாடியது. 
ஆனால் வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீராத நோயாக உருவெடுத்ததுடன் அவர்கள் மீது தினமும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இதேபோன்று வடக்குக் கிழக்கில் குவிக்கப்பட்ட இராணுவத்தினர் மக்கள் வாழ்விடங்கள் பொது இடங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து உயர் பாதுகாப்பு வலயங்களை நிறுவி அவற்றில் குடிகொண்டுள்ளனர். இதனால் பெருமளவிலான மக்கள் இருபது வருடங்களுக்கு மேலாக அகதிகளாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவிர விவசாய நிலங்கள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் போன்றனவும் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இவ்வாறான பகுதிகளை விட்டு இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அவர்களிடம் திருப்பிக்கொடுக்கப் பட வேண்டும் என தமிழ் மக்கள் மீது கரிசனை கொண்ட தமிழ் அரசியல் வாதிகள் தொடர்ச்சியாக  வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்களின் கூற்றை நிராகரிக்கும் ஜனாதிபதி "சர்வதேச  உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். எமது நாட்டில் எவரும் எந்தவொரு குற்றச்செயல்களையும் செய்ய முடியாது. பாதாள உலக, போதை பொருள் விற்பனை முகவர்களையும் நாம் இப்போது ஒடுக்கி விட்டோம். ஆனால் போரை வேறு வழியில் நடத்த முயற்சிக்கும் சிலர் வடக்குக் கிழக்கில் உள்ள இராணுவத்தை அகற்றுமாறு எம்மிடம் வற்புறுத்தி வருகின்றனர். இவர்களின் மனங்களில் போடப்பட்டுள்ள பயங்கரவாதம் என்னும் தடை இன்னமும் நீங்கவில்லை. இவர்களின் மனங்களில் உள்ள பயரங்கரவாதம் நீக்கப்படும் பட்சத்திலேயே அவர்களாலும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்' என நேற்று புதிய விளக்கம் தந்துள்ளார் ஜனாதிபதி.
மக்களின் இயல்பு வாழ்வை வலியுறுத்தி அவர்களை சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தும் நோக்கில், ஆயுதம் தரித்தவர்களின் கெடுபிடிகளை விலக்கி மக்கள் சுதந்திரமாக நடமாடும் நோக்கில் இயல்பு வாழ்வை ஏற்படுத்தும் வகையில், வடக்குக் கிழக்கில் படைகளை அகற்றுமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வந்த தமிழ் அரசியல் வாதிகள் இப்போது ஜனாதிபதியால் "மனப்பயங்கரவாதிகள்' என புதிய பெயர் சூட்டப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வடக்குக் கிழக்கில் அரசின் எல்லா வகையான ஆக்கிரமிப்புகளும் தொடரும் என்பது தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. இதுவே சிங்கள தேசத்தின் நிலைப்பாடு என்பதும் புரிய வைக்கப்பட்டுள்ளது.

நன்றி-சூரியகாந்தி (20.05.2012)

முறிகண்டிப் பிள்ளையார் யாருக்கு சொந்தமாவார்?




01 இந்து சமயத்தை  எவரும் பின்பற்ற  முடியாது எனக் கருதப்பட்ட காலத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றுக்கு பிரிட்டிஷ் விக்ரோரியா மாகாராணியே நன்கொடையாக ஆறு பேர்ச் நிலப்பரப்பை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது அந்தக் கடவுளின் புதுமையே.

02 செல்லப்பா கோயிலின் முழு உரிமையையும் பெற பொன்னுத்துரைக்கு எதிராக 1944 இல் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார்.
எனினும் அது வெற்றிபெறாத நிலையில் பொன்னுத்துரை மனமுவந்து ஒரு பங்கை அவருக்குக் கொடுத்திருந்தார்.

03 விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்துமா மன்றம் கோயிலைப் பெறுப்பேற்றுள்ள நிலையில் பரம்பரை வழிவந்த மணிவண்ணன் என்பவர் கோயிலின் உரிமைகோரி இப்போது வழக்குத் தொடர்ந்துள்ளார்.


"அதில இறங்கி ஒரு கச்சான் பை என்றாலும் வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம் தானே அது ஒரு புதுமையான கடவுள். கும்பிட்டதாகவும் போச்சுது.''
வன்னியில் மட்டுமல்ல ஏ9வீதியைக் கடந்து வவுனியா நோக்கியோ, யாழ்ப்பாணம் நோக்கியோ செல்லும் பலர் அந்தக் கோயில் மீதான நம்பிக் கையையும் அங்கே விற்கப்படும் கச்சானுக்கான மவுசையும் என்றும் நினைவில் வைத்திருந்தனர்.
இற்றைக்கு 92 வருடங்கள் பழமையான அந்தக் கோயிலின் வரலாறு வெள்ளையர்களால் எழுதப்பட்டது எனலாம். பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக நிலைகொண்டிருந்த அந்தக் காலத்தில், இந்து சமயத்தைப் எவரும் பின்பற்ற முடியாது எனக் கருதப்பட்ட காலத்தில் பிள்ளையார் கோயில் ஒன்றுக்கு பிரிட்டிஷ் விக்ரோறியா மாகாராணியே நன்கொடையாக ஆறு பேர்ச் நிலப்பரப்பை அன்பளிப்பாக வழங்கியிருந்தார் என்பது அந்தக் கடவுளின் புதுமையே.
றோட்டு வேலை, காட்டில் மரம் வெட்டுதல், புகையிரதப் பாதை அமைப்புப் போன்ற பணி களுக்காகத் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களும், வடபகுதியைச் சேர்ந்தவர்களும் முறிகண்டியை அண்டிய காட்டுப் பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த காலம் அது. வேலைகளை இலகுபடுத்துவதற்காகவும் குடி தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அந்தக் காலத்தில் மூன்று கிலோமீற்றருக்கு ஒரு கிணறு என்ற கணக்கில் கிணறுகள் வெட்டப்பட்டன. அப்போது முறிகண்டிப் பகுதியில் வெட்டப்பட்ட கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பிள்ளையார் வடிவிலான கல் ஒன்றை பாலை மரத்தின் கீழ் வைத்து வழிபடத் தொடங்கினர் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த சிலர். கிணறு கோயிலுக்குக் கிழக்குப் பக்கமாக ஆறு அடி சுற்றுவட்டத்தில் இப்போதும் உள்ளது. எந்தக் கோடை காலத்திலும் நீர்வற்றாத, ஆழம் குறைந்த கிணறாகவே அது காணப்படுகிறது.
பின்னர் பிள்ளையாருக்கு ஒரு சிறிய கொட்டகை அமைக்கப் பட்டது. இதைக் கேள்வியுற்ற வெள்ளைக்காரர்கள் அங்கு சென்று அந்தச் சிலையை அகற்றி விட்டுப் பாலை மரத்தைத் தறிக்க முற்பட்ட வேளை அந்த மரத்தில் இருந்து இரத்தம் கொட்டியதாக வும் இதனை விக்ரோறியா மகா ராணிக்கு அவர்கள் தெரியப் படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதிர்ச்சியுற்ற விக்ரோறியா மகாராணி அந்தப் பாலை மரத்தைத் தறிக்கத் தடை விதித்த துடன் அந்த இடத்தில் பிள்ளையாரைத் தொடர்ந்து வழிபட வசதியாக ஆறு பேர்ச் நிலத்தையும் அன்பளிப்புச் செய்தாராம்.
இதன்போது கோயிலைப் பராமரிக்கத் தொடங்கினார் சின்னட்டியார் என்பவர். இவர் அந்தப் பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்கள ஓவசியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். சின்னட்டியார் திருமணம் செய்யாததால் அவருக்கு வயது செல்ல அவரது மருகனான பொன்னுத்துரை என்பவருக்குக் கோயிலின் உரிமத்தை மாற்றிக் கொடுத்தார்.
1940 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாம் உலகப் போர் மூண்டிருந்த காலத்தில் சின்னட்டியாரின் தம்பியாரான செல்லப்பா என்பவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்தார். இதன்போது முறிகண்டிக்கு வந்த அவர், தனது அண்ணனின் கோயிலை அவதானித்து அதன் வருவாயில் கண்வைத்துள்ளார்.
பொன்னுத்துரையின் உரிமத்தைத் தன்வசம் ஆக்குவதற்காக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். எனினும் சின்னட்டியாரால் உரி மம் பொன்னுத்துரைக்கு எழுதப் பட்டதால் அதனை வாதாடி வெல்ல முடியாது போக அண்ணனின் சொத்து என்ற அடிப்படையில் பொன்னுத்துரை என்பவர் மனமுவந்து செல்லப்பாவுக்கு என்பவருக்கு ஒரு வருட பங்கைக் கொடுக்க முன்வந்தார். (பங்கு ஒருவருடம் பொன்னுத்துரைக்கும் மற்றைய வருடம் செல்லப்பாவுக்குமாக மாறிமாறி வரும்). எனினும் பொன்னுத்துரையிடம் இருக்கும் அந்தப் பங்கையும் கைப்பற்றுவதற்காக செல்லப்பா தனது மகளை (தனலட்சுமி) 1948இல் பொன்னுத்துரைக்குத் திருமணம் செய்து வைத்து அன்றைய தினமேஉரிமத்தை மாற்றி எழுதிக் கொண்டார். பின்னர் பொன்னுத்துரை 1975இல் இறந்துபோக மாவிட்டபுரம் பகுதியில் இருந்து கல்விப் பணிக்காக வன்னிக்கு வந்திருந்த அரசரட்ணம் என்ற ஆசிரியர் முறிகண்டியானுக்குத் திருப்பணி செய்யத் தொடங்கினார். பின்வந்த காலப்பகுதியில் செல்லப்பாவின் ஆளுகையின் கீழ் கோயில் இருந்தது.
1990களில் முறிகண்டிக் கோயிலை விடுதலைப் புலிகள் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். கோயிலில் இருந்து கிடைக்கும் வருமானம் விடுத லைப்புலிகளால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லங்களுக்குப் பகிர்ந்த ளிக்கப்படவேண்டுமென முடிவு செய்யப்பட்டு அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டதாம். இந்தக் காலப்பகுதியில் கோயிலைச் சுற்றி கடைகளும் பிரபல்யம் ஆகின.
19 வருடங்களாக விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழி ருந்த முறிகண்டிப்பிள்ளையாரின்  உரிமம் 2009 ஆம் ஆண்டு போர் முடிந்தபின் இலங்கை இந்து மா மன்றத்தின் பெயரில் கொண்டுவரப்பட்டது.
உரிமை வழக்கு
செல்லப்பாவின் மகனான குணரட்ணம் குடும்பம் 1988ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வசித்து வந்தனர். குணரட்ணம்  செல்லப்பா என்பவரின் மகன் மணிவண்ணன் (இப்போது கோயிலுக்கான உரிமம் கோருபவர்) என்பவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போர் முடிந்த பின்னர் வந்துள்ளார். இந்த நிலையில் கோயிலுக்கான உரிம வழக்கு மீண்டும் மணிவண்ணன் என்பவரால் தொடரப்பட்டுள்ளது. "முறிகண்டிப் பிள்ளையார் கோயிலைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும், பரம்பரை வழிவந்த தர்மகர்த்தா நானே'' என்று அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரிட்டிஷ் விக்ரோறியா மகாராணியால் வழங்கப்பட்ட காணிக்கான உரிமத்தில் பிள்ளையாருக்கு அன்பளிப்பு என்றே எழுதப்பட்டுள்ளது. அதனைப் பராமரித்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் பரம்பரை பரம்பரையாக சின்னட்டியாரின் வழிவந்தவர்கள் உரிமம் பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் இப்போதுள்ள மணிவண்ணன் என்பவரும் அந்த உரிமத்தைக் கோருகிறார் என்று முறிகண்டியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, கோயிலைச் சூழவுள்ள கடைகள் அவை அமைந்துள்ள காணிகளும் குத்தகை அடிப்படையில் அந்தக் காலப்பகுதியில் பெறப்பட்டவையே. எனினும் குத்தகைப் பணம் அரசுக்கு ஒழுங்குமுறையாகச் செலுத்தப்படவில்லை. அந்தக் கடைகளையும் பரம்பரை பரம்பரையாக தகப்பன், பிள்ளைகள் எனக் கடையை உரிமைகோரி நடத்தி வந்துள்ளனர். இப்போது வீதி அகலிப்பு, கடைத்தொகுதி அமைப்புப் போன்ற வேலைகளுக்கு இந்த உரிமப் பிரச்சினை நெருக்கடியாக உள்ளது. எனினும் குத்தகை நிலத்துக்கு சரியாக குத்தகை செலுத்தப்படாமையால் அதை அவர்கள் உரிமை கோர முடியாது. அந்தக் காணிகளும் அரசுடமையாகவே கருதப்படுகிறன.
ஏ9 வீதியால் முறிகண்டிப் பிள்ளையாரைக் கடந்து செல் லும்  பெரும்பாலானவர்கள் வாகனச்சாரதிகள் அனைவருமேபிள்ளையாரைத் தரிசித்து ஒரு சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டுச் செல்வது ஒரு மரபாக இன்றுவரை உள்ளது. நீண்ட தூரத்துக்குப் பயணம் செய்யும் பயணிகள் பிள்ளையாரை வணங்கி அங்கே விற்கப்படும் கச்சானைக் கொறித்துவிட்டு வீட்டுக்கும் வாங்கிச் செல்லும் வழக்கத்தால் "முறிகண்டிக் கச்சான்'' பிரபல்யம் ஆனது.
பொதுவாக வழிப்போக்கர் களின் தேவைகருதி உருவாகிய பிள்ளையார், அவர்களாலேயே செல்வத்தைத் திரட்டி அனாதைச் சிறுவர்களை வளர்த்து வந்தார். விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தின்போது கோயிலுக்குக் கிடைத்த வருவாய் இவ்வாறே செலவிடப்பட்டுள்ளதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இப்போது போர் நிறைவுற்று கோயில் புனரமைக்கப்பட்டு ஒரு கிராமத்துக் கோயிலாகவும், பயணிகளின் வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் முறிகண்டிப்பிள்ளையார் உருவெடுத்துள்ளார்.
தனியாரிடம் இருந்து விடுதலைப் புலிகளிடமும் பின்னர் அவர்களிடம் இருந்து அரசிடமும் கைமாறியுள்ள உரிமத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் தனியார் ஒருவரின் முயற்சி, அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவா என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. 1948இல் கோயிலின் முழு உரிமத்தையும் பெறுவதற்காக தனது மகளைச் செல்லப்பா பொன்னுத் துரைக்குத் திருமணம் செய்து வைத்தார். அதன்மூலம் கோயிலின் வருவாயை அவரே முழுமை யாக்கிக் கொண்டார். இதுபோலவே மணிவண்ணனும் கோயிலின் வரு வாயை உரிமையாக்கிக் கொள்ளவே பரம்பரைச் சொத்து என வழக்குத் தொடர்ந்துள்ளார் என ஊர் மக்கள் குற்றம் சாட்டாத படிக்குப் பார்த்துக் கொண்டால் நல்லது.
எது எப்படியாயினும் எதிர் வரும் ஓகஸ்ட் மாதம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. இதன் போதோ அல்லது ஓரிரு தவ ணைகளின் பின்னரோ முறிகண்டியாரைப் பராமரிக்கும் உரிமை யாருக்கு என்பது தெளிவாகிவிடும்.
*
நன்றி-சூரியகாந்தி (03.06.2012)

Sunday, February 19, 2012

வீடு வரும்வரை காய்ந்திருக்கும் மக்கள்


அன்று பலபேருக்கு நல்ல நாளாக இருக்க வேண்டும். ஏதோமுண்டியடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பின்னால் கூடிநின்று ஏதேதோபேசிக்கொண்டும் இருந்தார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமம் அது, இயற்கைத் தோற்றமுடைய அந்தக் கிராமத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. கிளிநொச்சி நகரத்திலிருந்து மேற்குப் பக்கமாக கிட்டத்தட்ட 20 25 கிலோமீற்றர் பயணித்தால் சென்றடையக் கூடிய கிராமத்தில் 420இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

வீதிப்போக்குவரத்துச் சரியாக முழுமைப்படுத்தப்பட இல்லை. மின்சார வசதியில்லை. சொல்லப் போனால், குக்கிராமம் போலத்தான் அது இருக்கிறது.

சனக்கூட்டம் ஏன் இவ்வாறு கூடியிருக்கிறது? என்று பார்ப்பதற்கான ஆர்வம் மேலெழுந்ததால் அருகில் சென்று பார்த்தேன். அங்கு, கொஞ்ச பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. தங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதா? என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதை நான் பார்த்தேன்.

93 பெயர்கள் அந்தப் பட்டியலில் அடக்கப்பட்டிருந்தன. இந்தத் தடவை அரச உத்தியோகத்தர்களுக்கும் அதில் இடம் வழங்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்தக் கிராமத்தில் 195 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுக் கணிசமானவை கட்டிமுடிக்கப்பட்டன. பெருமளவில் வழங்கப்பட்ட அளவுத் திட்டங்களுக்கு அப்பால் பயனாளர்களும் தங்கள் பணத்தைச் சேர்த்து 3 அறைகள், ஒரு கோல், ஒரு சமையலறை என்ற அமைப்பில் ஒரு உருப்படியான வீட்டைக் கட்டிமுடித்தார்கள்.

இந்த வீட்டுத்திட்டத்துக்காக வீட்டு உரிமையாளரின் பெயரில் காணி உறுதி அல்லது உரிமைப் பத்திரம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டதால் இத்திட்டத்திலிருந்து பலர் விலக்கப்பட வேண்டியவர்கள் ஆயினர்.

இதனால் அடுத்த கட்டத் திட்டத்தில் தமக்கு விரைவாக வீட்டுத்திட்டம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு அதிகாரிகளின் வரவையும் இந்த பெயர்ப் பட்டியலின் வரவையும் எதிர்பார்த்தபடியேபல மாதங்கள் கழிந்தன. இந்தக் கிராமத்தில் 2010 ஆரம்பத்தில் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு வருடங்கள் ஆனபோதும் மீதிப்பேருக்கு வீட்டுத்திட்டம் வந்துசேரவில்லை. (இப்போதும் பெயர்ப்பட்டியல்)

வீட்டுத்திட்டம் பற்றி அதிகாரிகளிடம் அந்தக் குடும்பங்கள் கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டங்கட்டமாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் குறித்த கிராமம் முதற்கட்டமான அதிக எண்ணிக்கையான வீடுகளைப் பெற்றுள்ளது. எனவே முதல் சுற்றில் எல்லாக் கிராமங்களுக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரேஇரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அப்போது உங்களுக்கும் வீடு கிடைத்துவிடும் என்ற பதில் கிடைத்தது.

நீண்டநாள் காத்திருப்புக்களின் மத்தியில் அந்த சனக்கூட்டம் கூடியிருந்த நாள் அதில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா எனத் தேடிய நாள் கடந்தவருடம் 12ஆம் மாதம் 15ஆம் திகதியாக இருந்தது.

ஓரளவுக்கு மனத்திருப்தி, வீட்டுத்திட்டம் வந்துவிடும் என்ற பெருமிதம் அவர்கள் மத்தியில் புரையோடியிருந்தது.

இன்று 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதுபற்றி எந்தவிதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அந்த மக்கள் நாளை கூட்டம் கூடுவார்கள். திட்டம் பற்றி அறிவுறுத்துவதற்கு அதிகாரிகள் வருவார்கள் என்று வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.

ஆனால் பெயர்விவரம் ஒட்டப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. யாரும் இதுவரை திரும்பிக்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. இப்போது அந்த ஊருக்குப் போனால் அந்தப் பெயர்ப் பட்டியலையும் காணவில்லை.

மீள்குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் தற்காலிக குடிசைகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வைக் கழித்துவிட்ட அந்த மக்கள் இப்போது ஒட்டப்பட்ட பெயர் விவரங்களையும் மறந்துவிட்டார்கள்.

யாராவது அதிகாரிகள் வந்தால் எங்களுக்கு வீட்டுத்திட்டம் வருமா? என்று கேட்டால் வந்துவிடும் என்றேபதில் கிடைக்கும். இரண்டு வருடங்களாக குடிசைகளில் இருந்தபடியேவீட்டுத்திட்டம் பற்றியும் கல்வீட்டில் எங்கள் புது வாழ்க்கை பற்றியும் கனவு கண்டபடியேஇருக்கின்றோம். இவற்றுக்கு உருப்படியான பதில் கிடைப்பதோஎங்கள் வாழ்க்கைக்கு விமோசனம் கிடைப்பதோஇப்போதைக்கு இல்லையென்றேஎமக்குத் தோன்றுகின்றது.

சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்கள் நாளுக்கு நாள் விலை@யறிக்கொண்டேஇருக்கின்றன. இந்த நெருக்கடிகளுக்குக் குடிசைகளில் இருந்தபடியேநாங்கள் முகங்கொடுக்கின்றோம். இதை பொறுப்பான எவரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை என்கின்றனர் அந்தக் கிராமத்து மக்கள்.

வன்னியில் பல கிராமங்கள் இந்தக் கிராமத்தைப் போலவேதான் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. ஆனால் அதற்கான தீர்வு, மக்களின் தேவைகள் பற்றி எவரும் சிந்திப்பதே கிடையாது.

பல கிராமங்களுக்கு முதற் கட்டமாக "சாம்பிளுக்கு' கொஞ்சக் கொஞ்ச வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. பரவலாக மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் இவ்வாறு கட்டிக் கொடுக்கப்பட்டதால் பல பேருக்குக் கணக்குக் காட்ட நல்ல வசதியாகவும் இருக்கிறது.

கிராம எண்ணிக்கை அடிப்படையில் எல்லாக் கிராமங்களுக்கும் இவை அமைந்துவிட்டதால் வெளியிடங்களில் இருந்து வருவோருக்கும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்கும் பட்டியலைத் தூக்கிப் போட்டு வீராப்பும் பேசமுடிகிறது.

ஆனால் பத்தில் ஒன்றேநிறைவேறிய கதை வந்துபோகும் பல பேருக்கு தெரியவே தெரியாது. தெரிவிக்கவும் அனுமதியில்லை. தெரியப்படுத்தவும் அதிகாரம் இல்லை. அறிக்கைகளில் சோடிக்கப்படும் கதையாகவே வகையாகவே அபிவிருத்திகள் தொடர்கின்றன.

பாவம், அரச நிர்வாகத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் தான் அவலப்படும் மக்களால் தினமும் ஏச்சுக் கேட்கும் பாவிகளாக உள்ளனர். அவர்கள் என்னதான் செய்துவிட முடியும். மேலதிகாரிகள் பணிப்பவற்றையும் சொல்பவற்றையும் கேட்டுத் தலையசைப்பதே அவர்களின் பணியாக உள்ளது.

எது எப்படியிருந்தபோதிலும் மக்களுக்கு ஆசைகளைத் தூண்டிவிட்டு அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்யாது அவர்களது கேள்விகளுக்குப் பதில் கூறாது தட்டிக்கழிப்பது அரசின் மற்றுமொரு அசமந்தப் போக்காக உள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் சுமை அதை ஈடு செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்பவற்றுக்கு மத்தியில் அரசு இதுவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் பொறுப்புக் கூறும் தன்மையிலிருந்தும் கடமையிலிருந்தும் விலகியிருப்பது எதிர்காலத்தில் அந்த மக்களின் வாழ்க்கையையேகேள்விக்குறியாக்கிவிடும்.

இன்றுவரும் நாளைவரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உருப்படியாக என்று வரும் என்பதையாவது சொல்லிவிட்டால் அவர்கள் தம்பாட்டில் இருந்துவிடுவார்கள். யுத்தத்தின்போது இருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு இதிலென்ன அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கப் போகின்றது.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் அரசிடமிருந்து ஏதாவது கிள்ளித் தெளிக்கப்பட்டால் அது மட்டுமே அவர்களுக்குச் சொத்தாக மாறும். கிள்ளல்கள் தொடரும் நிலையில் எப்போதுதான் தெளிப்பார்களோ?

அடிபட்டு நின்று தங்கள் பெயர்களை வாசித்த அந்தக் கூட்டத்தினர் இப்போது அந்தப் பக்கமே வருவதில்லை. மன உளைச்சலில் தங்கள் வேலைகளைப் பார்த்தபடி வீடுகளுக்குள்ளேமுடங்கிக் கிடக்கின்றனர். அரசு தமக்கான கடமைகளைச் செய்துகொண்டேஇருக்கின்றது. மக்களுக்காக அல்ல தமக்காகவே. *

நன்றி உதயன்-சூரியகாந்தி (19.02.2012)