Wednesday, September 28, 2011

சிலருக்கு ஆதாரம் பலருக்கு சேதாரம்


வன்னியில் போர் முடிவுக்கு வந்து இரண்டரை வருடங்கள் கழியும் நிலையில்மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்திபற்றியும் அரசியல் பற்றியும் ஆரவாரப்படும் அரசத் தரப்பினர் தற்போது இனக்கலப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரசிடமும்,வேறு உதவும் அமைப்புக்களிடமும் உதவியை எதிர்பார்த்திருந்த மக்கள் அவை முழுதாக கிடைக்காத நிலையில் தமது சொந்த முயற்சிகளை ஆரம்பித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த எத்தணித்துவருகின்றனர்.
ஒருபக்கம் நல்ல முயற்சிகள் நடைபெற மறுபக்கத்தில் தீய,சமூகத்துக்கு ஒவ்வாத செயற்பாடுகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது.அதாவது சிலர் தமக்கான வாழ்வாதாரத் தொழில் எனக்கருதிச் செய்யும் தொழில் பலரது இறப்புக்களுக்கும் குடும்பத்தகராறுகளுக்கும் பிறழ் நடத்தைகளுக்கும் காரணமாக அமைவதனையே காணக்கூடியதாக உள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் சட்டவிரோத மது உற்பத்தி தொடர்பான வழக்கொன்று விசாரிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படாத நாள் இல்லையென்றாகிவிட்டது.
இதில் சுவாரஷயமானதும் வேதனையானதுமான விடயம் என்னவென்றால் சட்டவிரோத மதுபான உற்பத்திக் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்படுபவர் தீர்ப்பறிக்கை சமர்ப்பித்த உடனேயே குற்றப்பணத்தை செலுத்தி சாதாரணமாக வெளியேறிவிடுகிறார்.அதுமட்டுமல்ல தான் இழந்துவிட்டதாகக் கருதும் அந்தப் பணத்தை வீடு சென்றதும் ஒரு நாளிலேயே உழைத்தும் விடுகிறார்.
காச்சுவதுக்கு மனமிருந்நால் காச்சிவிடலாம்
குடிப்பதுக்கு மனமிருந்தால் குடித்துவிடலாம்
கேட்பதற்கு யார் உள்ளார்?
இதுதான் வன்னியில் கசிப்பு உற்பத்தியாளர்களதும் வாடிக்கை நுகர்வோரதும் நிலைப்பாடாக உள்ளது.
கையும் களவுமாக பிடிபடும் ஒருசிலரே நாளாந்தம் நீதிமன்றுக்கு வருகின்றனர்.மற்றயபலர் சூழ்ச்சியாகத் தப்பித்து கொள்கின்றனர்.
ஒரு பின்தங்கிய கிராமம்.ஒதுக்குபுறமாக தனிமையில் உள்ள ஒரு வீடு.ஆனாலும் கொண்டாட்ட வீடுபோல ஆண்களால் மாலைப் பொழுது நிரம்பி வளிந்துகொண்டிருக்கும்.ஊரில் பலருக்கு அங்கு கசிப்பு விற்பனையாவது தெரியும்.துணிகரமாக இந்த தொழில் செய்ய பின்புலத்தில் அதிகாரத் தரப்பின் ஆதரவு இருப்பதாக மக்கள் உணருகின்றார்கள். காரணம் அடிக்கடி அந்த வீட்டுக்கு அவர்கள் விருநதாளிகளாக வந்து போவதுதான்.
வன்னியில் தட்டி கேட்டும் சுதந்திரம் இருப்பதாக இல்லை. சிலவேளை சட்டங்கள் கூட மாறுகின்றன. அன்றும் அதுதான் நடந்தது.குறித்த வீட்டில் நடப்பதை பார்த்து எரிச்சலுற்ற இளைஞன் தனக்கு தெரிந்த வகையில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தான்.
பொலிஸார் ஒருவர் வந்தார் கசிப்பை படிப்பவர் போல உடனே வீட்டுக்ககுள் நுளைந்தார்.பையனுக்கு சந்தோஷம் என்ர முயற்சி கைகூடிவிட்டது என்று மகிழ்தான். ஐந்து நிமிடத்தில் பொலிஸ் வெளியில் வந்தது கூடவே அந்த வீட்டு பெண்ணும் வந்தார். அந்த இளைஞனைப்பார்த்து பொலிஸகாரர் சிரித்துவிட்டு நீபோ நான்பாக்கிறன் என்றாராம்.
வெளியில் வரும்போது அவரது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் போத்தல் ஒன்றும்,கையில் காசும் இருந்ததை தான் அவதானித்ததாக பையன் சொன்னான்.(வன்னேரிக்குளத்தில் சம்பவம்,அக்கராயன் பொலிசாரிடம் முறையிடப்பட்டது,நடவடிக்கை-நீபோ நான் பாக்கிறன்)

நடைபாதை கசிப்பு வியாபாரி- விசுவமடுவில் சம்பவம்

இரவு 7 மணியிருக்கும்.திருமண வீடு ஒன்றுக்காக மூன்று நண்பர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்சில் சென்று இறங்கி அவரது வவீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றனர்.
ஒரு கடை அருகில் முதியவர் ஒருவர் சைக்கிளை சாத்திவிட்டு இருந்தார்.பஸில் சென்ற அலுப்புக்கு ஒரு பியர் அடிச்சா கலியாணவீட்டில இரவு ஏதாவது வேலை செய்து கொடுக்கலாம் எனத் திட்டமிட்ட மூவரும் அந்த முதியவர் அருகில் சென்று ஐயா இங்க சாராயம் பியர் விக்கிற கடை இல்லையா என்று கேட்டனராம்.
அதற்கு அவர் இருக்குது தூரப் போக வேணும். ஆமிதான் விக்கிறான்.பொது ஆக்கள் அத விக்க முடியாதாம். இப்ப அங்க இருக்காது. முடிஞ்சிருக்கும். நான் ஒண்டு வைச்சிருக்கிறன் அடிச்சுப்பாருங்களன் என்றாராம்.
இவர்களுக்கும் அது என்ன என்ற ஆவல்,ஆனால் கசிப்புப்பற்றி தெரியும்.பாய்க்கில கசிப்பு வச்சிருன்னிறன் தம்பி.நல்லா ஏத்தும் கொஞ்சம் அடிச்சுப்பாருங்க என்றாராம்.இவர்களுக்கும் புது இடம். வேண்டாம் ஐயா எங்களுக்கு என்றுவிட்டு, திரும்பி விட்டனர். திருமணவீட்டில் வந்து இராணுவ சாராயக் கடைபற்றி விசாரித்தபோது,விசுவமடு தேக்கங்காட்டுப்பகுதியில் மலிவு விலையில் அவற்றைப் பெறலாம் என்று அறிந்து கொணட மூவரும் “அட இடம் தெரியாததால் சந்தர்பத்தை மிஸ்பண்ணிட்டம்” என்று கவலைப்பட்டனராம்.
என்னதான் இருந்தாலும் சில குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழிலாக கசிப்பை உற்பத்தி செய்து விற்பது, நாளாந்தம் கூலிக்கு மாரடித்துவிட்டு “உடற்களைக்கு கொஞ்சம் குடிப்பம்” என்று எண்ணி தினமும் கசிப்பை குடித்து படிப்படியாக அவர்களது ஆயுளைக் அவர்களுக்கு தெரியாமலேயே குறைத்து வருகின்றது.
தினமும் போதையில் வீட்டுக்கு செல்லும் கணவன்மார் தனது மனைவியை வாய்கு வந்தபடி ஏசுவது,அடிப்பது,சந்தேகம் கொள்வது,இவை மட்டுமா? தான் பெற்ற மகளை,வளர்க்கும் பேரப்பிள்ளையைக்கூட தனது வெறியுடன் கூடிய காம பசிக்கு இரையாக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
குற்றச் செயலைத் தடுப்பதற்கென்று வன்னியில் பணியிலுள்ளவர்கள்கூட இதுபோன்ற காரியங்களிலேயே ஈடுபடுகின்றனர்.அவர்களுக்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்களது பரிசுகள் சம்பளத்துக்கும் மேலாக அமைவதால் அதையெல்லாம் எப்படி அவர்கள் குற்றச்செயலாக உணர்ந்துகொள்வார்கள்?
ஒட்டுமொத்தத்தில் சிலரின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிப்பதாகவே நோக்கப்படும்.இது விடயத்தில் யார்தான் அக்கறை செலுத்துவரோ?போருக்குமுன் கௌரவமான தொழில் புரிந்த ஒரு குடும்பம் இப்போது குடும்பமாகச் சேர்ந்து கசிப்பு காச்சி விற்பதுக்கு யார் தான் காரணமோ?
நாளுக்குநாள் சீரளியும்,திட்டமிட்டு சிலரால் சீரழிக்கப்படும் சமூகத்தை காப்பாற்ற யார்வருவாரோ?

பிரசுரம்: சுடர் ஒளி வாரஇதழ் 25செப்ரெம்பர்-01ஒக்ரோபர்2011

No comments: