http://euthayan.com/indexresult.php?id=11435&thrus=12
விளையாட்டுமைதானம் யாருக்கு சொந்தம்?
வவுனியா மாவட்டத்தில் முதல் தடவையாக பெண்கள் பிரிவில் உதைபந்தாட்டச் சம்பியனாக கனகராயன் குளம் மகாவித்தியாலய அணி தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அளவில் இந்த அணி மாகாண மட்டப் போட்டியில் கலந்து கொள்ளவேண்டும். தவிர இந்தப் பாடசாலையில் கூடைப்பந்து, கரப்பந்து அணிகளும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்று மாகாண மட்டத்துக்குச் செல்லவுள்ளன.
மாணவர்களின் திறமை அவர்களின் ஆவல் என்பவற்றை வெளிப்படுத்துவதோடு பாடசாலைக்கும் புகழைத் தேடித் தரக்கூடிய வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்துள்ளன. வரவேற்பைப் பெற்றுள்ளன.
போருக்குப் பின்னர் வன்னியில் கல்விச் செயற்பாடுகள் சீர்குலைந்து தற்போது படிப்படியாக சீர்ப்படுத்தப்பட்டுவரும் நிலையில் மாணவர்களது திறமைகளையும் அவர்களது ஆளுமைகளையும் வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு கல்விச் சமூகத்தவரதும், துறைசார்ந்த அதிகாரிகளதும் கடமை.
மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உதைபந்தாட்ட பெண்கள் அணி அதற்கான பயிற்சியில் ஈடுபடுவதற்கு விளையாட்டு மைதானம் இல்லாது தவிக்கின்றது என்பதே வேதனையானதும் வியப்பானதுமான விடயம். போர் முடிவுற்று மீளக் குடியமர்வுச் செயற்பாடுகளின் பின்னர் கனகராயன் குளம் மகாவித்தியாலயம் மீள ஆரம்பிக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் அந்தப் பாடசாலைக்கு என இருக்கும் விளையாட்டு மைதானம் தற்போது பிறிதொரு தரப்பின் பாவனையில் இருப்பது என்பது ஏற்றுக் கொள்ளமுடியாது. இதற்கும் மேலாக பாடசாலை நிர்வாகத்தினர் அதனைக் கண்டும் காணாமல் இருப்பது மாணவர்களது முயற்சிக்குத் தடையான ஒத்துழைப்பு.
மாவட்ட ரீதியில் உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியன்களான இந்தப் பாடசாலையின் பெண்கள் அணி மாகாண மட்டத்தில் பங்குபற்றும்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபட வேண்டும். ஆனால் அந்தச் சூழல் பாடசாலையில் இல்லை.
"சம்பந்தமே இல்லாத சிலர் முழுநேரமாக
மைதானத்தைப் பயன்படுத்த
அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடசாலையில் படித்து
வெளியேறிய எங்களுக்கு
அரை மணிநேரம் கூட மைதானத்தைப்
பயன்படுத்த அனுமதியில்லை''
எதிர்வரும் ஜூலை மாதம் 6ஆம் திகதி பொலிஸாருக்கு நடைபெறவுள்ள தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக கனகராயன் குளம் பொலிஸ் பிரிவுப் பொலிஸார் குறித்த பாடசாலை மைதானத்தை முழு நேரமாகப் பயன்படுத்தி வருகின்றனர். முதலில் அனுமதியின்றி பொலிஸார் மைதானத்தைப் பயன்படுத்துவதாக சொல்லப்பட்ட போதும், பின்னர் அனுமதியுடனேயே அவர்கள் மைதானத்தைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. இது விடயத்தில் பாடசாலையின் அதிபரையும், விளையாட்டுக்குப் பொறுப்பான ஆசிரியரையும் கேட்டபோது வாரத்துக்கு இரண்டு தடவை குறிப்பிட்ட நேரத்துக்குள் மாணவர்கள் பாடசாலை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடலாம் எனப் பதில் தந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் தமக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடுவதற்கு அனுமதி பெறவேண்டும் என்பதும், குறிபிட்ட நாள்களே மைதானத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் வேடிக்கையான விடயம். பாடசாலைக்குப் புகழ் தேடித் தரக்கூடிய போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்கு குறித்த மாணவிகள் தமது மைதானத்தில் பயிற்சி பெற முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டமானது.
பாடசாலை மாணவர்கள் தமக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடுவதற்கு அனுமதி பெறவேண்டும் என்பதும், குறிபிட்ட நாள்களே மைதானத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் வேடிக்கையான விடயம். பாடசாலைக்குப் புகழ் தேடித் தரக்கூடிய போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்கு குறித்த மாணவிகள் தமது மைதானத்தில் பயிற்சி பெற முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டமானது.
கனகராயன் குளத்துக்கு பொது விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளபோதும் அது போருக்குப் பின்னர் சீர் செய்யப்படவில்லை. பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த மைதானத்தில் ஏ9 வீதி திருத்தப் பணிகளுக்காக கிரவலும் கற்களும் பறிக்கப்பட்டு அதற்கான களஞ்சியமாக அந்த மைதானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தம்மிடம் அனுமதி பெறவில்லை எனத் தெரிவிக்கும் பிரதேச சபையினர் மைதானத்தை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஆனாலும் அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது கேள்வியே.
இதனால் பொது மைதானம் ஒன்று இல்லாத நிலையில் கிராமத்து இளைஞர்களும் பாடசாலை மைதானத்தையே மாலைவேளைகளில் பயன்படுத்தி வந்தனர். எனினும் அதற்கான அனுமதி பாடசாலை நிர்வாகத்தினரால் மறுக்கப்பட்ட நிலையில் இளைஞர்கள் வீதியில் நின்று வேடிக்கை பார்க்கும் நிலை தோன்றியுள்ளது.
"சம்பந்தமே இல்லாத சிலர் முழுநேரமாக மைதானத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையில் படித்து வெளியேறிய எங்களுக்கு அரை மணிநேரம் கூட மைதானத்தைப் பயன்படுத்த அனுமதியில்லை'' என்று குறைபட்டுக் கொள்கிறார்கள் ஊர் இளைஞர்கள்.
கனகராயன் குளம் பொலிஸ் நிலையம் அதற்கென வழங்கப்பட்ட காணியில் இயங்காது கமநல சேவை நிலையத்துக்குச் சொந்தமான காணியிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்கு அருகில் இருக்கும் இவர்கள் தமது பிரத்தியேக விளையாட்டுப் போட்டிக்காக பாடசாலை மைதானத்தை அதிகாரத்தின் அனுமதியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வலயக் கல்வி அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை. பாடசாலை நிர்வாகத்தினர் மாணவர்களது தேவை அறிந்தும் இந்தச் செயற்பாட்டைக் கண்டும் காணாமல் இருக்கக் கூடாது.
கனகராயன் குளம் மகாவித்தியாலயத்தில் 700 வரையான மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர். உயர்தரம் வரை உள்ள இந்தப் பாடசாலையில் பல்வேறு வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில் மாகாண மட்டப் போட்டி ஒன்றுக்கு பெண்கள் அணி தெரிவு செய்யப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. அவர்களை எதிர்காலத்தில் வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பாடசாலைக்குள்ளது. எனவே இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்தி மாணவர்களது தேவைகளை நிறைவேற்ற செயல்பட வேண்டும், பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வன்னியில் போரின் பின்னர் தனியார், அரச காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதோடு நிலச் ”வீகரிப்புகளும் வகை தொகையின்றி இடம்பெற்று வருகின்றன.
தனியாருக்குச் சொந்தமான காணியிலேயே கனகராயன் குளத்தில் விகாரை ஒன்று எழுந்திருப்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய விடயம்.
பொலிஸார் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடவேண்டுமாயின் அவர்களுக்கென்று மைதானங்களை ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபடவேண்டும். இதற்கு அந்தத் துறைசார்ந்த கட்டமைப்புகளிடம் மாற்று ஏற்பாடுகளைக் கோரவேண்டும். பதிலாக அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்கள் பாவனை நிலங்களைத் தமது தேவைக்குப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
எனவே மாணவர்கள் மேல் கரிசணை கொள்பவர்கள் அவர்களுக்கான தற்போதைய தேவையைப் பூர்த்திசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். *
நன்றி- சூரியகாந்தி(10.06.2012)
No comments:
Post a Comment